தனது தந்தை சுவர் ஏறி குதித்து வந்து படத்தில் நடிக்க கூடாது என தன்னை மிரட்டுவதாக வெண்ணிலா கபடிகுழு 2, கடைக்குட்டி சிங்கம் படங்களில் நடித்த இளம் நடிகை பகிரங்கமாக புகார் அளித்துள்ளார்.
மலையாள நடிகையான அர்த்தனா பினு 2017ம் ஆண்டு சமுத்ரகனி நடிப்பில் வெளிவந்த தொண்டன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து செம்ம படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாகவும், கார்த்தி நடிப்பில் வெளிவந்த கடைக்குட்டி சிங்கம், வெண்ணிலா கபடி குழு 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வரும் அர்த்தனா பினு, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது தந்தை மீது அவர் அளித்துள்ள அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் மலையாள திரையுலகை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
டிவிட்டரில் அர்த்தனா பினு ஷேர்செய்த வீடியோவில், அவரின் வீட்டு சுவரை ஒருவர் ஏறி குதித்து ரகளை செய்யும் காட்சி இடம்பெற்றிருந்தது. இது குறித்து பதிவிட்ட அர்த்தனா பினு, மலையாள நடிகரான விஜயகுமார் எனது தந்தை. அவரும் என் அம்மாவும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். ஆனாலும், அவர் சொத்துக்காக எங்கள் வீட்டில் அத்துமீறி ஏறி குதித்து ரகளை செய்துள்ளார். போலீசாரிடம் புகார் அளித்தும் யாரும் நடவடிக்கை எடுக்காததால் இதை பதிவிடுகிறேன்.
நான் கதவுகளை மூடி விட்டதால் ஜன்னல் வழியாக வந்து மிரட்டும் எனது தந்தை, என் தங்கையையும், பாட்டியையும் கொன்று விடுவேன் என கூறுகிரார். மிரட்டலால் அவரிடம் பேச போன என்னிடம் படங்களில் நடிப்பதை நிறுத்தி விட வேண்டும் என்றும், அவர் சொல்வதை தான் கேட்க வேண்டும் என்றும் என்னை மிரட்டினார். அதுமட்டும் இல்லாமல் அவர் சொல்லும் படங்களில் தான் நான் நடிக்க வேண்டும் என கூறுகிறார். நான் நடித்து வரும் படக்குழுவையும் மோசமான வார்த்தைகளால் திட்டினார். எனது வீடு, வேலை செய்யும் இடம் என எங்கு போனாலும், வந்து அத்துமீறி நுழைந்து, பிரச்சனைகளை செய்து வருகிறார்.
என் தந்தை மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. அவருக்கு எதிராக நானும், என் அம்மாவும் புகார் அளித்துள்ளோம். வழக்கு விசாரணையில் இருந்தும் கூட அவர் இவ்வாறு நடந்து கொள்கிறார். நடிப்பு என்பது எனது விருப்பம். நான் விரும்பும் வரை எனது உடல் ஒத்துழைக்கும் வரை தொடர்ந்து நடித்து வருவேன்” என தனது தந்தைக்கு எதிராக அர்த்தனா பானு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். இதனால், மலையாள திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.