போலி ஆவணங்கள் மூலம் அரசு நிலத்தை அபகரித்ததாகக் கூறி அமைச்சர் பொன்முடி மீது லஞ்ச ஒழிப்புத்துறை தொடுத்த வழக்கில், போதிய ஆவணங்கள் இல்லை என்றுகூறி, அமைச்சர் பொன்முடியை சென்னை சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. 1996ஆம் ஆண்டு போக்குவரத்துத் துறை அமைச்சராக பொன்முடி இருந்தபோது இந்த வழக்கு தொடுக்கப்பட்டது.


1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை போக்குவரத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி சைதாப்பேட்டை ஸ்ரீநகரில் உள்ள வடக்கு காலனி பகுதியில் 3,650 சதுர அடி நிலத்தை அபகரித்ததாக குற்றம்சாட்டப்பட்டது. திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடி, தனது அதிகாரத்தை பயன்படுத்தி மாமியார் சரஸ்வதி பெயரில் போலி ஆவணம் தயாரித்து நிலத்தை அபகரித்தாக புகாரில் தெரிவிக்கப்பட்டது. இந்த புகாரில் அமைச்சர் பொன்முடி, அவரின் மாமியார் சரஸ்வதி, சம்பவம் நிகழ்ந்த காலத்தில் அடையார் சார்பதிவாளராக இருந்த புருபாபு, தற்போது மேயராக இருக்கும் மகேஷ், சைதை கிட்டு உள்ளிட்ட 10 பேர் மீது 2003ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 


கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு நிலுவையில் இருந்த இந்த வழக்கின் விசாரணை அண்மையில் தீவிரமடைந்தது. சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் அமைச்சர் பொன்முடி மீதான நில அபகரிப்பு புகாரை விசாரித்தது. வழக்கு நடைபெற்று வந்த காலத்தில் பொன்முடியின் மாமியார் சரஸ்வதி, சார்பதிவாளராக இருந்த புருபாபு, சைதை கிட்டு உள்ளிட்டோர் உயிரிழந்தனர். இதனால் 3 பேரை விடுவித்து எஞ்சிய 7 பேர் மீது வழக்கு விசாரணை நடைபெற்றது. 


வழக்கு விசாரணையில், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜரத்தினம் உள்ளிட்ட 90 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன. 100க்கும் மேற்பட்ட சான்று ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் நில அபகரிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி உட்பட அனைவரையும் விடுதலை செய்து நீதிபதி ஜி.ஜெயவேல் தீர்ப்பளித்துள்ளார். பொன்முடி மீதான குற்றத்தை நிரூபிக்கப்படவில்லை என்றும், அவருக்கு எதிராக எந்த ஒரு ஆதாரங்களும் சமர்ப்பிக்கவில்லை என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


முன்னதாக விசாரணையில், அமைச்சராக இருந்த தான் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தவில்லை என்றும், அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தனது மாமியார் பெயரில் நிலம் வாங்கியதாகவும், எந்த ஒரு மோசடியையும் செய்யவில்லை என்றும் பொன்முடி தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன.