பாஜகவைச் சேர்ந்தவர், பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் மீது சிறுநீர் கழித்து அவமதித்த வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த குற்றத்தைச் செய்த பாஜகவைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டதுடன், அரசு நிலத்தில் அத்துமீறி கட்டப்பட்ட அவரது வீடும்  அதிகாரிகளால் இடிக்கப்பட்டது. 






இந்நிலையில், மத்தியப்பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், சிறுநீர் கழித்து அவமதிக்கப்பட்ட பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞரின் காலைக் கழுவி, அவருக்கு பொட்டு வைத்துள்ளார். இந்த நிகழ்வு குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 


மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், போபாலில் உள்ள முதல்வர் மாளிகையில் பாதிக்கப்பட்ட பழங்குடி சமுதாயத்தைச் சார்ந்த இளைஞரான தஷ்மத் ராவத்தை சந்தித்து கால்களைக் கழுவினார்.


ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய பிரதேசம் முதலமைச்சர்,  சிவராஜ் சிங் சவுகான், வைரலான வீடியோவுக்கு எதிர்வினையாக, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சுக்லா மீது நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாக கூறியிருந்தார். குற்றம் சாட்டப்பட்டவருக்கு "கடுமையான தண்டனையை" அரசாங்கம் உறுதி செய்யும் என்று சிங் சவுகான் கூறினார். "என்ன ஆனாலும் நாங்கள் அவரை (குற்றவாளியை) விடமாட்டோம்," என்று அவர் தெரிவித்துள்ளார்.


பாஜகவை சேர்ந்தவர்


குற்றம் சாட்டப்பட்டவர் பாஜகவைச் சேர்ந்தவரா என்று கேட்டதற்கு, “குற்றவாளிகளுக்கு ஜாதி, மதம் மற்றும் கட்சி கிடையாது. ஒரு குற்றவாளி ஒரு குற்றவாளி மட்டுமே. அவரை தப்பிக்க விடமாட்டோம். ” என்றார். இதே கருத்தை எதிரொலித்த மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா, “அவர் எந்தக் கட்சியாக இருந்தாலும், யார் தவறு செய்தாலும் தண்டிக்கப்படுவார்கள்” என்றார்.


அரசியல் செய்கிறதா பாஜக? 


மத்தியப் பிரதேசத்தில் ஆளும் கட்சியாக இருப்பது பாஜக. அடுத்த ஆண்டு இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், பாஜகவிற்கு இழுக்கு ஏற்படும் வகையில், பாஜகவைச் சேர்ந்தவர், பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்தவர் மீது சிறுநீர் கழித்தது பெரும் சர்ச்சை ஆகியுள்ளது. இந்நிலையில், இதனை சரி செய்ய பாஜக குற்றம் சாட்டப்பட்டுள்ளவரின் வீட்டை இடிப்பது, பாதிக்கப்பட்டவரின் காலைக் கழுவுவது என செய்வதெல்லாம் , இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தலிலிம், 2024ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலிலும், மத்தியபிரதேசத்தில்  25 - 30 சதவீதம் உள்ள பழங்குடிகளின் வாக்குகளைப் பெறுவதற்காகத்தான் பாஜக இப்படி செய்கிறது என சமூக வலைதளத்தில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றது.