மலையாள நடிகரும், மிமிக்ரி கலைஞருமான கொல்லம் சுதி கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு தற்போதைய வயது 39. நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு இன்று அதிகாலை 4.30 மணிக்கு சரக்கு லாரியில் கார் மோதி விபத்து ஏற்பட்டது. 


நடிகர் சுதியுடன் பயணித்த மூன்று மிமிக்ரி கலைஞர்களான பினு அடிமாபி, உல்லாஸ் மற்றும் மகேஷ் ஆகியோர் படுகாயமடைந்தனர். 


தகவலின்படி, சுதி மற்றும் மிமிக்ரி கலைஞர்கள் மூன்று பேர் கேரளாவில் உள்ள வட்டகரையில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று முடித்துவிட்டு தங்கள் வீடுகளுக்கு திரும்பி கொண்டிருந்தனர். இந்த விபத்தில் சுதிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த அவர், கொடுங்கலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காயமடைந்த மற்ற மூவர்கள் கொடுங்கலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


கொல்லம் சுதி மறைவிற்கு கேரள திரையுலகை சேர்ந்த பலரும் தங்கள் இரங்கலை வெளிபடுத்தி வருகின்றன. சுதி மறைவுக்கு  முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.


யார் இந்த கொல்லம் சுதி..? 


கொல்லம் சுதி தனது மிமிக்ரி திறமையால் பல ரசிகர்களின் மனதை வென்றவர். தனது திறமையால் பல்வேறு மலையாள திரைப்படங்களில் நடித்துள்ள இவர், மலையாளத்திலும் பல நகைச்சுவை நிகழ்ச்சிகளில் விருந்தினராக பங்கேற்றுள்ளார். 


கொல்லம் சுதி 2015 இல் அஜ்மல் இயக்கிய கந்தாரி படத்தின் மூலம் வெள்ளித் திரையில் அறிமுகமானார். அதன்பிறகு, கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன், குட்டநாடன் மர்ப்பப்பா, கேசு ஈ வீட்டை நாடன், எஸ்கேப், ஸ்வர்கத்திலே காட்டுறும்பு கொல்லம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.