பிரபல தெலுங்கு நடிகரும், நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையுமான நடிகர் கிருஷ்ணா மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 79.


தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார்


கட்டமனேனி சிவராம கிருஷ்ண மூர்த்தி எனும் இயற்பெயர் கொண்ட நடிகர் கிருஷ்ணா, 1970களில் தெலுங்கு சினிமாவில் பெரும் நட்சத்திரமாக உருவெடுத்தார். தெலுங்கின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான மகேஷ் பாபுவின் தந்தையான இவர், 1961ஆம் ஆண்டு தொடங்கி இதுவரை 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.


79 வயதான நடிகர் கிருஷ்ணா நேற்று (நவ.14) நள்ளிரவு மாரடைப்பு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்தார். இந்நிலையில் இன்று (நவ.15) அதிகாலை சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.


காங்கிரஸ் முன்னாள் எம்பி


தெலுங்கு சினிமாவில் பல ஆண்டுகள் கொடிகட்டிப் பறந்த நடிகர் கிருஷ்ணா 2009ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருது பெற்றுள்ளார். நந்தி, ஃபிலிம் ஃபேர் என பல விருதுகளைக் குவித்துள்ளார்.  


தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் ஜெய் கல்லா இவரது மருமகன் ஆவார்.  1980களில் காங்கிரஸில் இணைந்து எம்.பியான கிருஷ்ணா, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மறைவுக்குப் பிறகு அரசியலில் இருந்து விலகினார். 


தாய், தந்தை அடுத்தடுத்து உயிரிழப்பு


 






நடிகர் மகேஷ் பாபுவின் தாய் இந்திரா தேவி கடந்த செப்டம்பர் மாதம் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்த ஆண்டு தொடக்கத்தில் மகேஷ் பாபுவின் அண்ணன் ரமேஷ் பாபுவும் சிறுநீரகப் பிரச்னை காரணமாக உயிரிழந்தார்.


இந்நிலையில் தற்போது தனது தந்தையையும் இழந்து வாடும் நடிகர் மகேஷ் பாபுவுக்கு அவரது எண்ணற்ற ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.