நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகி உள்ள லவ் ஸ்டோரி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நடிகர்களின் நடிப்பு மிரட்டலாக உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
தனுஷின் தெலுங்கு படத்தை இயக்கவுள்ள இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு திரையரங்குகளில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்குப் பின் இந்தியாவில் இப்போதுதான் திரையரங்குகளில் படங்கள் வெளியாக ஆரம்பித்துள்ளன. தெலுங்கைப் பொறுத்தவரை சமீபத்தில் திரையரங்கில் வெளியான சீட்டிமார் திரைப்படம் மோசமில்லாத வசூலை பெற்றது. ஆனால் லவ் ஸ்டோரி திரைப்படம் அதிக எதிர்பார்புகளுக்கு மத்தியில் வெளியானதால், வசூல் சாதனை படைத்துள்ளது என்று தகவல்கள் வருகின்றன. இந்த ஆண்டு திரைப்படங்களை வெளியிட பல முன்னணி நடிகர்களும் பயந்து அடுத்த ஆண்டுக்கு ஒதுங்கிய நிலையில், நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடித்த லவ் ஸ்டோரி திரைப்படம் நேற்று வெளியாகி மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை அள்ளியுள்ளது ஒட்டுமொத்த திரையுலகையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
நான்கு புறமும் இருந்து பாசிட்டிவ் செய்திகள் வந்து, திரைப்படத்தை அனைவரும் பாராட்டி வரும் நிலையில், தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோ மகேஷ் பாபு திரைப்படம் பார்த்துவிட்டு ட்விட்டரில் பாராட்டுகளை தெரிவித்திருந்தார். அவர் இட்ட பதிவில், "சேகர் கம்முலா எல்லாவற்றையும் சரியாக செய்து அற்புதமான திரைப்படத்தை கொடுத்துள்ளார், நாக சைதன்யா நடிப்பில் நல்ல ஒரு இடத்துக்கு வந்துவிட்டார், என்ன நடிப்பு! இத்திரைப்படம் அவரின் கேரியரில் ஒரு கேம் சேஞ்சராக இருக்கும். சாய் பல்லவிக்கு எலும்புகள் ஏதாவது இருக்கிறதா! இப்படி ஒருவர் நடனமாடி நான் ஸ்க்ரீனில் பார்த்ததில்லை. பவன் என்ன மாதிரியான இசையை வழங்கி இருக்கிறார்! நீங்கள் அவரிடமிருந்தது இன்னும் கேட்க போகிறீர்கள், அவர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் இடை கற்றவர் என்று கேள்வி பட்டேன், ஏ.ஆர்.ரஹ்மான் சார், நீங்களே இவரை நினைத்து பெருமை கொள்வீர்கள். இந்த சூழ்நிலையில் இதுபோன்ற பிளாக்பஸ்டர் திரைப்படத்தை கொடுத்ததற்கு தயாரிப்பாளர்களுக்கு நன்றி." என்று எழுதியிருந்தார்.
நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி இருவரும் இந்த படத்தில் வேற லெவலில் நடித்துள்ளதாக ஏகப்பட்ட ரசிகர்கள் படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர். காதல் கதைகள் என்றுமே கல்லா கட்டும் என்பதை மீண்டும் இந்த படம் நிரூபித்து இருக்கிறது. இதுவரை மூன்று தெலுங்குப் படங்களில் சாய் பல்லவி நடித்துள்ளார். மேலும் சாய் பல்லவி நடிப்பில் தமிழில் வெளியான தியா படம் தெலுங்கிலும் வெளியானது. தற்போது மேலும் மூன்று தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார் சாய் பல்லவி.