சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படம் அடுத்த மாதம் சுதந்திர தின கொண்டாட்டமாக வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தின் இரண்டாவது பாடலாக மோனிகா பாடல் நேற்று வெளியானது.
பூஜா ஹெக்டேவை விஞ்சிய செளபின் சாஹிர்:
பூஜா ஹெக்டே நடனத்தில் உருவாகியுள்ள இந்த பாடல் நேற்று வெளியாகி மாபெரும் வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது. இந்த பாடலில் நடிகை பூஜா ஹெக்டேவின் நடனம் ரசிகர்களின் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெறும் என்று படக்குழு எதிர்பார்த்தது.
ஆனால், நடிகை பூஜா ஹெக்டேவை காட்டிலும் அந்த பாடலில் நடனம் ஆடிய செளபின் சாஹிருக்கு பலத்த வரவேற்பு குவிந்து வருகிறது. மலையாள சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக உருவெடுத்துள்ள அவருக்கு இதுதான் முதல் தமிழ் படம் ஆகும். மலையாள சினிமாவில் வில்லன், குணச்சித்திரம், கதாநாயகன் என பல பரிமாணங்களில் நடித்துள்ள செளபின் சாஹிருக்கு அங்கு நடனம் ஆடுவதற்கு வாய்ப்புகள் கிடைத்ததே இல்லை.
இனி செளபின் ஆட்டம்தான்:
ஆனால், இந்த பாடலில் அவர் ஆடிய நடனம் இதுவரை மலையாள திரையுலகமே காணாத நடனம் ஆகும். அபாரமாக ஆடிய செளபின் சாஹர் பூஜா ஹெக்டேவை மிஞ்சும் அளவிற்கு நடனம் ஆடியதால் இனி எதிர்காலத்தில் மலையாள திரைப்படத்திலும் செளபின் சாஹிர் நடனம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கலாநதி மாறன் தயாரித்துள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்துடன் சத்யராஜ், நாகர்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இவர்களுடன் அமீர்கான் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
ஆகஸ்ட் 14ம் தேதி ரிலீஸ்:
இந்த படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகிறது. மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் வெளியாகிறது. லோகேஷ் கனகராஜின் எல்சியூ வரிசையில் இந்த படம் இடம்பெறவில்லை என்று அவரே தெரிவித்துள்ளார். ஆனால், இந்த படம் தங்கக்கடத்தலை மையமாக வைத்து உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது.