தென்னிந்திய திரையுலகில் பிரபலமானவர் நடிகர் சித்தார்த். இவர் தமிழில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமான அவர், தமிழிலும், தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார். இந்தியிலும் அமீர்கான் உள்பட பல நடிகர்களுடனும் இணைந்தும், தனியாகவும் நடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்த சித்தார்த் மீண்டும் தெலுங்கு படத்தில் நடித்துள்ளார்.
மகாசமுத்திரம் என்று பெயரிடப்பட்ட இந்த படத்தை அஜய்பூபதி இயக்கியுள்ளார். நீண்ட இடைவேளைக்கு பிறகு சித்தார்த் நடிக்கும் இந்த படத்தில் சர்வானந்த், அதிதிராவ், அனு இமானுவேல் உடன் நடித்துள்ளனர். நீண்ட வருடங்களுக்கு பிறகு தெலுங்கில் சித்தார்த் நடித்துள்ளதால், மகா சமுத்திரம் திரைப்படத்தை பல இடங்களில் பெருமிதத்துடன் சித்தார்த் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த நிலையில், மகாசமுத்திரம் திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் சித்தார்த் பங்கேற்கவில்லை. இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. மேலும், மகாசமுத்திரம் படத்தை பற்றி பெருமிதமாக குறிப்பிடும் சித்தார்த்த ஏன் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினர்.
இந்த நிலையில், இந்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மகாசமுத்திரம் படத்தின் இயக்குனர் அஜய்பூபதி, சித்தார்த் ஏன் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள விளக்கத்தில், அறுவை சிகிச்சை ஒன்றை மேற்கொள்வதற்காக நடிகர் சித்தார்த் லண்டன் சென்றிருப்பதால் அவரால் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.
நடிகர் சித்தார்த் திடீரென அறுவை சிகிச்சை செய்து கொள்ள லண்டன் சென்றிருப்பது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள மகாசமுத்திரம் திரைப்படம் தெலுங்கு மட்டுமின்றி தமிழிலும் வெளியாக உள்ளது.
நடிகர் சித்தார்த் நடிப்பில் கடைசியாக 2013ம் ஆண்டு தீயா வேலை செய்யனும் குமாரு படமும், 2017ம் ஆண்டு வெளியான அவள் படமும் தெலுங்கில் வெளியாகியது. இந்த நிலையில், நீண்ட வருடங்களுக்கு பிறகு சித்தார்த் தெலுங்கில் நேரடியாக நடிக்கும் படம் மகாசமுத்திரம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நேரடியாக தெலுங்கில் சித்தார்த் கடைசியாக 2013ம் ஆண்டு ஜபார்டஸ்த் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர், 8 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போதுதான் நேரடியாக மகாசமுத்திரம் என்ற படத்தில் நடிக்கிறார்.
ஆனால், 2013ம் ஆண்டுக்கு பிறகு உதயம் என்.எச்.4, தீயா வேலை செய்யனும் குமாரு, ஜிகர்தண்டா, காவியதலைவன், எனக்குள் ஒருவன், அரண்மனை 2, ஜில் ஜங் ஜக், அவள், சிவப்பு மஞ்சள் பச்சை, அருவம் ஆகிய தமிழ் படங்களில் நடித்துவிட்டார். இடையில் கம்மாரா சம்பவம் என்ற மலையாள படத்திலும் நடித்துள்ளார். இந்தியன் 2ம் பாகத்திலும் சித்தார்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.