2023 ஐபிஎல் போட்டியை சட்டவிரோதமாக ஒளிபரப்பு செய்யப்பட்டதாக பதியப்பட்ட வழக்கில் நடிகை தமன்னா நேரில் ஆஜராக சொல்லி சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் சட்ட விரோதமாக ஃபேர்ப்ளே செயலியில் ஒளிபரப்பு செய்யப்பட்டதால், ஐபிஎல் தொடரின் ஒளிபரப்பு உரிமையை பெற்ற தங்கள் நிறுவனத்துக்கு கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக வியாகாம் நிறுவனம் சைபர் கிரைமில் புகாரளித்தது. இதுதொடர்பாக ஃபேர்ப்ளே செயலியை விளம்பரப்படுத்திய பிரபலங்கள் விசாரணை வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகர் சஞ்சய் தத்துக்கு மகாராஷ்டிரா சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் அந்த நாளில் தான் இந்தியாவில் இல்லை என்றும், அதற்கு பதிலாக தனது பதிலை பதிவு செய்ய மற்றொரு தேதியை ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இப்படியான நிலையில் ஏப்ரல் 29 ஆம் தேதி நடிகை தமன்னா பாட்டியாவை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சைபர் கிரைம் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
என்ன நடந்தது?
5 ஆண்டுகளுக்கு ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையை வயாகாம் நிறுவனம் பெற்றிருக்கும் நிலையில் கடந்தாண்டு ஆன்லைன் சூதாட்ட செயலியான ஃபேர் பிளே மும்பை மற்றும் நாட்டின் முக்கிய நகரங்களில், கேமிங் தளத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும், ஐபிஎல்லை இலவசமாக பார்க்கலாம் எனவும் அனைத்து ஊடக தளங்களிலும் விளம்பரம் செய்தது. இதனைத் தொடர்ந்து சட்டவிரோதமாக ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டது கண்டறியப்பட்டு வியாகாம் நிறுவனம் சார்பில் மும்பை சைபர் கிரைம் பிரிவில் புகாரளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.