காலநிலை மாற்றம் மற்றும் கோடை காலம் என்பதால் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் தொடங்கியது முதல் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. வழக்கமாக மே மாதம் அக்னி நட்சத்திரத்தின் போது 40 டிகிரி செல்சியஸ் கடந்து பதிவாகும் வெப்பநிலை தற்போது ஏப்ரல் மாதம் முதலே பல்வேறு மாவட்டங்களில் பதிவாகி வருகிறது. குறிப்பாக நேற்று முன் தினம் இந்தியாவில் பதிவாக அதிகபட்சமான வெப்பநிலையில் சேலம் மூன்றாவது இடம் பிடித்துள்ளது. அதாவது 108 டிகிரி பாரன்ஹீட் பதிவாகி சேலம் 3வது இடத்திலும், 109 டிகிரி பாரன்ஹீட் பதிவாகி ஒடிசா 2வது இடத்திலும், 110 டிகிரி பாரன்ஹீட் பதிவாகி ஆந்திரா முதல் இடம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் சேலம், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக 40 டிகிரி செல்சியஸ் கடந்து வெப்பம் பதிவாகி வருகிறது. இதனால் பகல் நேரங்களில் மக்கள் வெளியே செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர். வெப்பநிலை அதிகரித்ததோடு மட்டுமல்லாமல் வெப்ப அலையும் வீசி வருகிறது இதனால் கூடுதல் அவதி.


இது வரக்கூடிய நாட்களில் அதிகரித்து காணப்படும் என்றும், 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும் என்பதால் மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் இன்று திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல்,  கருர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 18 வடக்கு உள் மாவட்டங்களில் இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


அதேபோல் நாளை முதல் வரும் 28 ஆம் தேதி வரை  திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி ஆகிய 24 மாவட்டங்களில் இயல்பை விட வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி வரை அதிகரித்து காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த 24 மணி நேரத்தில் ஈரோடு மாவட்டத்தில் 42 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதாவது 107 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளது. சுமார் 12 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவகியுள்ளது.