விஜய் சேதுபதி


தமிழ் சினிமா கண்ட சிறந்த நடிகர்களில் விஜய் சேதுபதியும் (Vijay Sethupathi) ஒருவர் என்று உறுதியாக சொல்லலாம். சினிமாவின் எந்தவித பின்னணியும் இல்லாமல் நடிகராக வேண்டும் என்கிற கனவை சுமந்து அயராது உழைத்திருக்கிறார். குடும்பச் சூழலால் துபாய்க்கு வேலைக்குச் சென்று இளம் வயதிலேயே திருமணம் செய்துகொண்ட விஜய் சேதுபதி, பல்வேறு படங்களில் ஜூனியர் ஆர்டிஸ்டாக நம் கவனத்தை ஈர்த்திருக்கிறார். சீனு ராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நாயகனாக தொடங்கி இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக வலம் வருகிறார். நாயகனானப் பின் ஹீரோவாக தான் நடிப்பேன் என்றில்லாமல் வில்லன், சிறப்பு கதாபாத்திரம் ஆஃப் பீட்டான படங்கள் என எல்லா முயற்சிகளையும் தொடர்ந்து செய்துபார்ப்பது அவரது வளர்ச்சிக்கு பக்கபலமாக இருந்து வருகிறது. 


மகாராஜா


தற்போது விஜய் சேதுபதி தனது 50ஆவது படத்திற்கான ப்ரோமோஷன்களில் பிஸியாக இருக்கிறார். குரங்கு பொம்மை படத்தை இயக்கி கவனமீர்த்த நிதிலன் ஸ்வாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் 50ஆவது படமாக உருவாகியுள்ளது மகாராஜா. இப்படத்தில் அனுராக் கஷ்யப், மம்தா மோகன் தாஸ் , முனிஷ்காந்த், பாய்ஸ் மணிகண்டன், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், ஏ.ஏல் தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இருவரும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்கள். வரும் ஜூன் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் மகாராஜா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி தான் துபாயில் வேலைபார்த்த அனுபவங்களைப் பற்றி மிக உருக்கமாகப் பேசினார்.


நிறைய படங்களுக்கு சம்பளம் வரவில்லை


விஜய் சேதுபதி இந்தியில் நடித்த ஜவான் படம் ரூ.1000 கோடி வசூலித்ததைக் குறிப்பிட்டு பத்திகையாளர் ஒருவர் "ஆயிரம் கோடி பாத்திருக்கீங்க" என்று பேசினார். இதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி “சினிமாவில் நாங்கள் எந்த மாதிரியான பிரச்னைகளை எதிர்கொள்கிறோம் என்று உங்களுக்கு தெரியவில்லை. நீங்கள் சொல்வதைக் கேட்டு மக்கள் உண்மையாகவே அதை நம்பி விடுகிறார்கள். நான் நடித்த பல படங்களுக்கு இன்னும் சம்பளம் கூட வரவில்லை, செக் போடாமல் விட்டது, கேட்காமல் விட்டது என நிறைய இருக்கிறது. இருந்தும் நான் ஒரு படத்தை தயாரிக்க நினைக்கும் மனிதரை ஆதரிக்க நினைக்கிறேன். வருத்தமாக இருந்தாலும் ஒரு கதை சொல்ல வரும் மனிதனுக்கு என்னால் முடிந்ததை செய்கிறேன்" என்று அவர் தெரிவித்தார்.


‘வெற்றி தோல்விகளை ஒரே மாதிரிதான் எடுத்துக் கொள்கிறேன்’


"சினிமாவில் 50 படங்களில் நான் நடித்திருக்கிறேன். இதில் சில படங்கள் வெற்றியடைந்துள்ளன, சில தோல்வி அடைந்திருக்கின்றன. சில படங்கள் தோல்வி அடையும் என்று தெரிந்தே தான் அதில் நடித்திருக்கிறேன். வெற்றியோ, தோல்வியோ இரண்டையும் ஒரே மாதிரிதான் நான் எடுத்துக்கொள்கிறேன். 50 படங்கள் பண்ணிவிட்டோம் என்று நிறைவாக எல்லாம் நான் உணரவில்லை. கலையைப் பொறுத்தவரை நிறைவு என்பதே கிடையாது என்றுதான் நினைக்கிறேன்.


இன்று கேமரா முன்பு நின்றாலும் நிறைய கேள்விகள் எனக்குள் இருக்கின்றன. ஒவ்வொரு காட்சியிலும் ஏதாவது புதுமையாக செய்ய முயற்சி செய்தபடியே தான் இருக்கிறேன். ஹீரோவோ, வில்லனோ எந்தக் கதாபாத்திரத்தையும் நான் போகிற போக்கில் எடுத்து நடிக்கவில்லை. நான் வில்லனாக நடித்தாலும் அதில் பார்வையாளர்களை என்டர்டெயின் செய்ய வேண்டும் என்பயே என் நோக்கம். நான் வில்லனாக நடித்த படம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதனால் நான் ஹீரோவாக நடிக்கும் படங்களும் தான் பாதிப்படையும். அதனால் ஹீரோ என்றாலும், வில்லன் என்றாலும் நான் தேர்வு செய்யும் கதாபாத்திரங்களில் கவனமாக இருக்கிறேன்" என்று விஜய் சேதுபதி பேசியுள்ளார்.