பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம் முடிந்த நிலையில், மாணவர்களின் கோரிக்கைக்கு இணங்க விண்ணப்பிப்பதற்காக அவகாசம் ஜூன் 11 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பொறியியல் சேர்க்கை தலைவர் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாட்டில் 440-க்கும் மேலான பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வரும் நிலையில், அவற்றில் வழங்கப்படும் இளநிலை படிப்புகளுக்கு சுமார் 1.5 லட்சம் இடங்கள் உள்ளன. இவை 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில், இணையவழியில் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளுக்கு கூடுதல் இடங்கள் உருவாக்கப்பட்டு, ஒதுக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


பொறியியல் கலந்தாய்வு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் நடத்தப்படுகிறது. 2024ஆம் ஆண்டு அரசு, அரசு உதவிபெறும், தனியார் பொறியியல் கல்லூரிகளில் சேர,விண்ணப்பப் பதிவு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மே 6ஆம் தேதி அன்றே இணையம் மூலம் தொடங்கியது. மாணவர்கள் இணையம் மூலம் ஜூன் 6ஆம் தேதி வரை விண்ணப்பித்தனர்.  


2.49 லட்சம் பேர் விண்ணப்பம்


தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் இணையதளம் வாயிலாக கலந்தாய்வில் பங்கேற்பதற்காக இறுதி நாளான ஜூன் 6 அன்று வரை, 2 லட்சத்து 49 ஆயிரத்து 918 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். அதில், 2 லட்சத்து 6 ஆயிரத்து 12 பேர் கட்டணத்தைச் செலுத்தி இருந்தனர். 1 லட்சத்து 78 ஆயிரத்து 180 மாணவர்கள் சான்றிதழ் பதிவேற்றமும் செய்துள்ளனர். 


இந்த நிலையில், விண்ணப்பப் பதிவுக்கான அவகாசம் தற்போது ஜூன் 11ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப் பதிவு முடிந்த பின்னர் ரேண்டம் எண் ஜூன் 12ஆம் தேதி வழங்கப்பட உள்ளது. மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 10ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. சேவை மையம் வாயிலாக, மாணவர்கள் குறைகளை நிவர்த்தி செய்ய ஜூலை 11 முதல் 20ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.


இதுவரை விண்ணப்பிக்க தவறிய மாணாக்கர்கள்‌ புதிதாக விண்ணப்பத்தினை https://www.tneaonline.org/ என்ற இணையதளம்‌ வாயிலாக பதிவு செய்து, பதிவுக் கட்டணம்‌ செலுத்தி, தங்களது சான்றிதழ்களை பதிவேற்றம்‌ செய்து கொள்ளலாம்‌ என்று தமிழ்நாடு மாணாக்கர்‌ பொறியியல்‌ சேர்க்கை தலைவர்‌ வீர ராகவ ராவ்‌ தெரிவித்துள்ளார். 


விண்ணப்பிப்பது எப்படி?


பொறியியல் படிப்பில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் https://www.tneaonline.org/user/login அல்லது http://www.dte.gov.in/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து, பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்.


இணைய வசதி இல்லாதவர்கள் சிறப்பு சேவை மையங்கள் மூலமாக தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்பு எண்‌: 044 - 2235 1014 / 044 - 2235 1015
அழைப்பு எண்‌: 1800 - 425 - 0110


இ- மெயில் முகவரி: tneacare@gmail.com


கூடுதல் விவரங்களுக்குhttps://www.tneaonline.org என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்


இதையும் வாசிக்கலாம்: Group 4 Exam: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்படி இருந்தது?- கட் ஆஃப் குறையுமா? தேர்வர்கள் என்ன சொல்கிறார்கள்?