திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில மாதங்களாக குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. குறிப்பாக திருட்டு, வழிப்பறி, பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் பெண்கள் சாலையில் நடமாடுவதற்கே அச்சமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.


குறிப்பாக வீடுகளில் தனியாக இருக்கும் பெண்கள், முதியோர்களை அச்சுறுத்தி நகை, பணம்  கொள்ளையடிப்பது போன்ற சம்பவங்கள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆகையால் காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


மேலும் இதனை தொடர்ந்து திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் மாவட்ட காவல் ஆளிநர்களுக்கு , குற்றச்சம்பவங்களை முற்றிலும் தடுக்க வேண்டும். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.


அதன்படி, திருச்சி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சந்தேகம்படும்படி நபர்கள் சுற்றித்திரிந்தாலோ அல்லது குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து உடனடியாக விசாரணை செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


கள்ளத்தொடர்பால் பெண் கொலை..


இந்நிலையில் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அடுத்துள்ள சிறுகாம்பூரை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரின் மனைவி சுமதி (42). சலவை தொழிலாளியான ரவிக்குமாருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அவரின் மனைவி சுமதி திருச்சியில் உள்ள ஒரு ஜவுளி கடைக்கு வேலைக்கு சென்று வந்தார்.


இந்நிலையில் வாழ்மால் பாளையத்தை சேர்ந்த மாரிமுத்து (30) என்பவருடன் சுமதிக்கு செல்போன் மூலமாக தொடர்பு ஏற்பட்டு உள்ளது. இது நாளடைவில் கள்ளத்தொடர்பாக மாறியது. கள்ளத்தொடர்பில் இருவரும் பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்துள்ளனர். இது சுமதியின் உறவினர்களுக்கு தெரிய வரவே, அவர்கள் சுமதியையும் கண்டித்துள்ளனர்.


இதனால் சுமதி, மாரிமுத்துவிடம் கள்ளத்தொடர்பை துண்டித்துக்கொள்ளலாம் என்று கூறி உள்ளார். அதன் பின்னர் மாரிமுத்து சுமதியை பார்க்க வந்தபோது அவர் பேசவில்லை. மேலும் மாரிமுத்துவின் செல்போன் அழைப்பையும் அவர் ஏற்கவில்லை. 


கள்ளக்காதலி திடீரென தொடர்பை துண்டித்துக்கொண்டதை மாரிமுத்துவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சுமதியிடம் நேரில் வந்து உல்லாசத்திற்கு அழைத்த போதும் சுமதி செல்ல மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மாரிமுத்து, சிறுகாம்பூர் பேருந்து நிலையத்தில் கத்தியுடன் காத்திருந்து உள்ளார்.




உல்லாசத்திற்கு வர மறுத்த பெண்ணை குத்தி கொலை செய்த கள்ளக்காதலன்


இந்நிலையில், வேலைக்கு செல்வதற்காக அங்கு வந்த சுமதியை கத்தியால் சரமாரியாக குத்தி உள்ளார். இதில் கதறி துடித்த சுமதி தப்பித்து ஓடி உள்ளார். ஆனால் தொடர்ந்து விரட்டி சென்று ஆத்திரம் தீரும் வரை மாரிமுத்து குத்தி உள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சுமதி அங்கேயே சரிந்து விழுந்தார்.


இதனை கண்ட பொதுமக்கள் மாரிமுத்துவை சுற்றி வளைத்து பிடித்தனர். அவரிடம் இருந்த கத்தியை பிடுங்கி உள்ளனர். மேலும் அவருக்கு தர்ம அடி விழுந்துள்ளது. இது குறித்து வாத்தலை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த சுமதியை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.


ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் கொண்டு வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அவரின் உடல் திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. பொதுமக்களால் தாக்கப்பட்ட மாரிமுத்துவை வாத்தலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுகாம்பூர் பேருந்து நிலையத்தில் பெண்ணை ஓட ஓட விரட்டி குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.