விக்ரம், துருவ் விக்ரம் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது  ‘மகான்’ திரைப்படம். ஜகமே தந்திரத்தில் விட்ட தனது ட்ரேடு மார்க்கை மீண்டும் பிடித்திருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ். இதுவரை பார்த்திராத விக்ரமை திரையில் காண்பித்த கார்த்திக் சுப்பராஜ், துருவ் விக்ரமை வேறு மாதிரி வார்த்தெடுத்திருக்கிறார்.


 



இடத்தை பிடிக்க சரியான தளம் ஆக்‌ஷன்:


முதல் படத்தில் சாக்லேட் பாயாக வந்த துருவிற்கு, இதில் ஆக்‌ஷன் களம். தமிழ் சினிமாவில் இடத்தை பிடிக்க ஆக்‌ஷன்தான் சரியான களம் என்பதை நன்கு தெரிந்த விக்ரம், அந்த ஸ்கெட்சை மகனுக்கும் சரியாக போட்டு கொடுத்திருக்கிறார். படத்தின் முதல் பாதி முழுக்க முழுக்க விக்ரமுக்கானது. 


திணிக்கப்பட்ட காந்திய தத்துவம், சாமானிய வாழ்கையின் மீதான ஏக்கம், குடும்பத்தின் மீதான பிடிப்பு, குடி, சூது, பணத்தின் மீதான பசி, நட்பு என வெவ்வெறு வேரியேஷன்களில் காந்தி மகானாக வரும் விக்ரம் காட்டிய நடிப்பு சிறப்பு என்றாலும் அதில் ஆச்சரியப்படுவதிற்கு ஒன்றுமில்லை.. காரணம்.. அது விக்ரம்.. ஆனால் இங்கு ஆச்சரியத்தின் உச்சத்தில் நிற்கவைத்திருப்பது விக்ரமின் மகனான துருவ் விக்ரம்.. ஆம்.... முறுக்கு மீசை, மிருக தோரணை, அதிர வைக்கும் குரல் என அவரின் என்ட்ரீயே அதகளப்படுத்தி விடுகிறது.. 




தனது வாழ்கை இப்படி ஆனதற்கு சத்யவானாக வரும் பாபி சிம்ஹாதான் காரணம் என நெஞ்சில் வன்மம் வளர்க்கும் துருவ் அவரை, விக்ரமை வைத்தே முடிப்பதற்கு கையில் எடுக்கும் ஆயுதம்தான் போலீஸ் உடை. அந்தக் கதாபாத்திரம் ஒரு சைக்கோ போலீஸ் கதாபாத்திரம் என்பதால், அந்த கதாபாத்திரம் துருவ் விக்ரம் நின்று விளையாடுவதற்கு சரியான தளமாக அமைந்துவிட்டது.




சத்யவானின் மகனை அழைத்துக்கொண்டு துருவ் விக்ரமிடம் சென்று சமாதானம் செய்யும் அந்த ஒற்றைக்காட்சி போதும்  ‘எனக்கும் நடிக்கத் தெரியும்’ என்று துருவ் சொல்வதற்கு.. சத்யவானின் மகன் ராக்கி எமோஷனலாக பேச, பாசம் வந்ததுபோல நடித்துவிட்டு பின்னர் மீண்டும் மாறும் காட்சியாகட்டும், அப்பா சமாதானம் செய்ய செய்ய, அதை கொஞ்சம் கூட  சட்டை  செய்யாமல்  துருவ் கொடுக்கும் வைரைட்டி கலந்த ரிப்ளையும் நச் ரகம்தான்..




எல்லாவற்றையும் தாண்டி ஆக்‌ஷன் களத்தில், அவர் அடிக்கும் ஒவ்வொரு அடியும் அதற்கு துணைநிற்கும் அவரின் கொக்கரிக்கும் குரலும் நமக்குள் அந்த கதாபாத்திரத்தின் மீது இயல்பாகவே ஒரு வித பயத்தை வரவைத்து விடுகிறது. 


சவால் என்ன? 


துருவிற்கு படத்தில் நடிகனாக இருக்கும் மிகப் பெரிய சவால்.. தன் எதிர்நிற்கும் விக்ரம் என்ற நடிகனை எதிர்கொள்வது.. ஆனால் அதை அநாசியமாக செய்து முடித்திருக்கிறார் துருவ் விக்ரம்.. அதற்கு படத்தில் அவருக்கு வழங்கப்பட்ட ஆக்‌ஷன் போலீஸ் கதாபாத்திரம் உறுதுணையாக நின்றிருக்கிறது. 




காரணம்.. எதிர்நிற்கும் விக்ரம், மகன் என்ற எமோஷனில் சிக்கியிருப்பதால் குற்ற உணர்வில் துருவ் முன்னால் நிற்கும் போதும் சரி, பிற கதாபாத்திரங்களில் முன்னர் நிற்கும் போது சரி, ஒரு படி இறங்கியே நிற்கிறது. அது எதிர்நிற்கும் கதாபாத்திரங்களுக்கு இயல்பாகவே நடிப்பதற்கான அதிகமான ஸ்கோப்பை கொடுத்து விடுகிறது. ஒரு கட்டத்தில் அது கோபத்தில் கொப்பளித்து வெடித்து சிதறினாலும், அது சில நிமிடங்களே நீடிப்பதால் அதுவரைக்குமான அந்த கேப் பிற கதாபாத்திரங்கள் ஸ்கோர் செய்ய கொஞ்சம் சாதகமாகவே அமைந்திருக்கிறது.




அந்தக் கேப்பில் துருவ் விக்ரமுக்கான ஸ்கெட்சை தரமாக போட்டு கொடுத்திருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ்.. அந்த கேப்பை கனகச்சிதமாகவும் பயன்படுத்தியிருக்கிறார் துருவ். போலீஸ் கதாபாத்திரத்திற்காக உடலை மாற்றியிருப்பது, விக்ரமுடனான சண்டை காட்சிகள் என எதிலும் துருவ் சமரசம் காட்டவில்லை. நிச்சயம் உழைப்பை கொடுத்திருக்கிறார். 


முதல் படத்தில் அறிமுக நடிகருக்கான சின்ன சின்ன கிளேஷேக்களில் சிக்கியிருந்த துருவுக்குள் இருந்த நடிகனை தாதா பாய் நெளரோஜி உருக்கி வெளியே எடுத்திருக்கிறது திறமை எங்கிருந்தாலும் வெளியே வந்து விடும்.. உங்களுக்குள் திறமை இருக்கிறது.. உச்சம் தொட வாழ்த்துகள்.. 


Also Read | Rajini Next Movie Update: ஸ்டைலா.. கெத்தா.! நெல்சனுடன் கைகோக்கும் மாஸ் ரஜினி.! வெளியானது ரஜினி 169 அறிவிப்பு!