மதுரை என்றாலே அரசியல், சினிமா தொடங்கி காதுகுத்து முதல் கல்யாணம் வரை வித்தியாசமான வசனங்களுடன் அனைவரையும் கவரும் வகையில் போஸ்டர்கள் அடித்து ஒட்டுவார்கள். திருமணவிழா சுவரொட்டிகளில் வீட்டில் வளர்க்கும் விலங்குகளின் படங்களை அச்சிடுவது, கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களில் எமனுக்கே எச்சரிக்கை விடுப்பது, புதிய திரைப்படங்கள் வெளியாகும் போது நடிகர்களை அரசியலுக்கு அழைப்பது போன்ற போஸ்டர்கள் என அத்தனை போஸ்டர்களையும் கடந்துசெல்லும் போது பார்க்காமல் செல்ல முடியாது என்கிற அளவிற்கு ரசிப்பு தன்மையோடு் போஸ்டர் அடித்து ஒட்டுவார்கள். இந்நிலையில் மதுரை முழுவதிலும் மோதலை தூண்டும் வகையில் அஜித் - விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்களால் பரபரப்பு - நடவடிக்கை எடுக்குமா காவல்துறை என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக உள்ள நடிகர் விஜய் - அஜித் இருவரும் தொடக்கத்தில் ராஜாவின் பார்வையிலயே என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்து பின்னர் இருவரும் தனத்தனியாக திரைப்படங்களில் நடிக்க தொடங்கி தற்போது தமிழ்சினிமாவின் உச்ச நாயகர்களாக அவரது ரசிகர்களால் உருவாக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தெருவில் ஒட்டப்படும் போஸ்டர்கள் தொடங்கி உலகையே ஆட்டிப்படைக்கும் , பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டா போன்ற சமூகவலைதளங்களிலும் அஜித் விஜய் ரசிகர்களிடையே கருத்துமோதலானது ஒவ்வொரு படங்கள் வெளியாகும் போது அதிகரித்துவருகின்றது.
பகவதி - வில்லன், திருமலை - ஆஞ்சநேயா, ஆதி - பரமசிவன், போக்கிரி - ஆழ்வார், ஜில்லா - வீரம் என இதுவரை 13 திரைப்படங்கள் விஜய் - அஜித் நடித்த திரைப்படங்கள் ஒரே நேரத்தில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் பொங்கல் பண்டிகையின் போது மட்டும் கோயமுத்தூர் மாப்ளே - வான்மதி, ப்ரண்ட்ஸ் - தீனா, ஆதி - பரமசிவன், போக்கிரி - ஆழ்வார், ஜில்லா - வீரம் ஆகியப் படங்கள் நேரடியாக மோதியப் படங்களின் வரிசையில் தற்போது வாரிசு - துணிவு படங்களும் இணைந்துள்ளன இந்நிலையில் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜூ அஜித்தை விட விஜய் பெரிய நடிகர் என கூறியதில் இருந்தும், வாரிசு ஆடியோ பிரமாண்டமாக நடத்தப்பட்டது. அதற்கு முன்பாக நல்ல படத்திற்கு விளம்பரம் தேவையில்லை அஜித் தரப்பில் கூறப்பட்ட நிலையில் மதுரையில் அஜித் - விஜய் ரசிகர்களிடையே போஸ்டர் மூலமாக வார்த்தை யுத்தம் தொடங்கிவிட்டது.
மாநகரில் எங்கு பார்த்தாலும் அஜித் - விஜய் ரசிகர்கள் ஒருவருக்கொருவர் மோதலை உருவாக்கும் வகையிலான வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை ஒட்டிவைத்துள்ளனர். ஒருவரை ஒருவர் நேரடியாக வார்த்தைகளால் மோதிக்கொள்ளும் வகையில் பணிவா சொன்னா ஏத்துக்கலாம் துணிவா நின்னா வா பாத்துக்கலாம், நேரடியாக மோதிப்பாருங்கடா எவனா இருந்தாலும் வாங்கடா, மோதிப்பாரு பார்ப்போம் என்பது போன்ற மோதலை ஏற்படுத்தும் வகையிலான வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டபட்டுள்ளது. மதுரை மாநகரில் ரயில்நிலைய சுவர்கள், அரசு கட்டிட சுவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் என பல்வேறு இடங்களிலும் இந்த போஸ்டர்கள் ஒட்டப்ட்டுள்ளன. கடந்த 2019ஆம் ஆண்டு அஜித் - விஜய் ரசிகர்களிடையே ஏற்பட்ட மோதலில் ரசிகர்களிடையே கத்திகுத்து சம்பவமும் ஏற்பட்ட நிலையில் இதுபோன்று நிகழ்வுகள் மீண்டும் உருவாகும் வகையில் தான் அஜித் - விஜய் ரசிகர்கள் மோதலை தூண்டும் வகையில் போஸ்டர்களை ஒட்டிவருகின்றனர்.
ரசிகர்களிடையே வார்த்தை மோதலை ஏற்படுத்தும் இதுபோன்ற சுவரொட்டிகள் ஒட்டப்படுவதை காவல்துறையினர் கண்காணித்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபோன்ற சுவரொட்டிகளை பார்த்துசெல்லும் பள்ளிசிறுவர்கள் கல்லூரி மாணவர்கள் பார்த்தபடி கடந்துசெல்லும் போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் நடைபெற்று மோதல்போக்கு உருவாக்ககும் நிலை உள்ளது குறிப்பிடதக்கது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Physically Disabled Cricket: திண்டுக்கல்லில் மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் போட்டி: ஒரு நாள் தொடரை கைப்பற்றியது பங்களாதேஷ்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்