காமெடி நடிகர் வையாபுரியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. 1995 ல் இருந்து சின்னத்திரை, வெள்ளத்திரை என தமிழக மக்களிடம் நன்கு பிரபலமானவர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று, மீண்டும் சின்னத்திரை பிரபலமானார். தற்போது சில படங்களில் நடித்து வரும் வையாபுரி, பிறப்பால் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்.


ராமகிருஷ்ணன் என்கிற பெயரில், 1968 செப்டம்பர் 19 ம் தேதி பிறந்த வையாபுரி, அதன் பின் சினிமா ஆசையில் சென்னை வந்தார். தூர்தர்ஷனில் ஒளிரப்பான சின்ன மருது பெரிய மருது, மால்குடி டேஸ் போன்ற சீரியல்களில் நடித்த அவர், அதன் பின் மறைந்த நடிகர் விவேக் அறிமுகத்தில், சினிமா வாய்ப்பை பெற்றார். அதன் பின் விவேக் உடன் பல படங்களில் நடித்த அவர், துள்ளாத மனமும் துள்ளும் படத்தின் மூலம் பெரிய அறிமுகம் பெற்றார். 


உலகநாயகன் கமல்ஹாசனின் நிறைய படங்களில் நடித்திருக்கும் வையாபுரி, ஒரு கட்டத்தில் வாய்ப்புகளை இழந்தார். காலத்தின் மாற்றத்தால் அது நடந்திருக்கலாம் என புரிந்து கொண்ட அவர், அதன் பின், மீண்டும் முயற்சி எடுத்து தற்போது தமிழ் சினிமாவில் தனது அடுத்த இன்னிங்ஸ்ஸை தொடங்கியுள்ளார். 






பிக்பாஸ் நிகழ்ச்சி, வையாபுரியின் முழு குணத்தையும், அவரது குடும்ப பின்னணியையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்த்தது.நிறைய ஓட்டுகளையும், ஆதரவையும் அவர் பெற்றார். இந்நிலையில் தான், சமூக செயற்பாட்டாளராக அவர் பல பகுதிகளுக்குச் செல்ல ஆரம்பித்தார். அதன் ஒரு பகுதியாக மதுரையில் நண்பேண்டா என்கிற வாட்ஸ் ஆப் குரூப் தொடங்கப்பட்டது.


அதில் 136 பேர் கொண்ட பிரபலங்கள் இணைந்தனர். அவர்கள் அனைவருமே மதுரையின் பிரபலமானவர்கள். சமூக செயற்பாட்டு பணிகளை அவர்கள் தொடர்ந்தனர். பின்னர் அந்த வாட்ஸ் ஆப் குழு, அறக்கட்டளையானது. அந்த 136 பேரில் வையாபுரியும் ஒருவர். பிறருக்கு மட்டுமல்லாமல், தன் குழுவில் இருப்போரின் தேவைகளையும், அவர்களுக்கான உதவிகளையும் நண்பேண்டா குழு செய்து வந்தது. அதன் படி, சினிமா துறையில் நீண்டகாலமாக இருக்கும் நடிகர் வையாபுரிக்கு, ஒரு இணைதளம் ஆரம்பிக்க முடிவு செய்தனர். 


அதன் படி வையாபுரி டாட் காம் என்கிற இணையதளத்தை ஆரம்பித்து அதற்கான துவக்க விழா நேற்று நடந்துள்ளது. மதுரை சர்வேயர் காலனியில் ஓட்டல் ஒன்றில் நடந்த விழாவிற்கு, நண்பேண்டா குழுவின் தலைவர் டெம்பிள் சிட்டி குமார், பொருளாளர் பார்த்திபன் உள்ளிட்ட குழுவைச் சேர்ந்த பிரபலங்கள் அனைவரும் பங்கேற்றனர். 






நடிகர் வையாபுரியின் சினிமா பயணம், அதுபற்றி புகைப்படங்கள், அவரில் சினிமா தோற்றங்கள் என பல்வேறு விதமான புகைப்படங்கள் அந்த இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக, சினிமா தொடர்பான வாய்ப்புகளுக்கு இந்த இணையதளம் வையாபுரிக்கு பெரிய அளவில் உதவும் என்கிற நோக்கில் இந்த வசதியை நண்பேண்டா குழு செய்து தந்துள்ளது. 




தனது நண்பர்கள் ஏற்பாடு செய்த இந்த வெப்சைட் வசதியை கண்டு நெகிழ்ந்து போன வையாபுரி, விழாவில் நெகிழ்ச்சியோடு அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். நடிகர் செந்தில் உள்ளிட்டோர் இந்த நண்பேண்டா குழுவில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மதுரையைச் சேர்ந்த சரவணன் இன்போடெக் குட்டி சங்கர் என்பவர், இந்த இணையத்தை பிரத்யேகமாக வடிவமைத்துள்ளார். 


காமெடி நடிகர்களில், பிரத்யேக வெப்சைட் வைத்திருக்கும் நடிகராக தற்போது வையாபுரி மாறியுள்ளார்.