JaiBhim: குறவர் சமூகத்தினரை இழிவுப்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரில் சூர்யா பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


2021ம் ஆண்டு நவம்பர் மாதம் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த படம் ஜெய்பீம். 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்த இந்த படத்தில் மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ராஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ராஜாக்கண்ணு - செங்கேணி என்ற பழங்குடியின தம்பதிகள் போலீசாரால் தாக்கப்பட்டு துன்பத்திற்கு ஆளானதையும், இருளர் சமூகத்தினர் மீது பொய் வழக்கு போட்டு போலீசார் நடத்திய மனித உரிமை மீறல்களை தோலுரித்து காட்டும் படமாக ஜெய்பீம் படம் எடுக்கப்பட்டது. ஒடுக்கட்டப்பட்ட மக்கள் மீது நடத்தப்பட்ட சாதி வன்மத்தை கூறும் ஜெய் பீம் படம் மிகப்பெரிய அளவில் வெற்றிப்பெற்றது.


பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதி கேட்டு குரல்கொடுக்கும் சூர்யாவின் நடிப்பு பலரையும் பாராட்ட வைத்தது. இதற்கெல்லாம் மேலாக தாழ்த்தப்பட்ட மற்றும் ஏழை மக்களுக்காக வாதாடிய ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவின் கேரக்டராக ஜெய்பீம் படத்தில் சூர்யா நடித்திருந்தார். தாழ்ந்த சாதியாக இருந்தாலும், உயர் சாதியாக இருந்தாலும் கல்வி ஒன்றே மக்களை அதிகாரப்படுத்தும் என்ற ஒற்றை மந்திரத்தை ஆணித்தரமாக எடுத்து கூரும் ஜெய்பீம் படம் பல்வேறு விருதுகளை வென்றது. 


அதேநேரம் ஜெய்பீம் படத்தில் குறவர் இன மக்களை இழிவுப்படுத்தியதாக புகாரும் எழுந்தன. குறவர் சமூகத்தை தவறாக சித்தரிக்கும் நோக்கத்தில் ஜெய்பீம் படத்தில் காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக கூறி படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நடிகரான சூர்யா மீதும், இயக்குநர் த.செ.ஞானவேல் மீதும் குறவர் நல்வாழ்வு சங்கத்தின் தலைவர் முருகேசன் சார்பில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. 


இந்த புகாரை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் புகாரின் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முருகேசன் மனு தாக்கல் செய்திருந்தார். அதன் மீதான விசாரணை படத்தின் தயாரிப்பாளர் என்ற வகையில் சூர்யாவையும், இயக்குநர் ஞானவேலையும் எதிர்மனுதாரராக சேர்த்த நீதிமன்றம், மனு தொடர்பாக இருவரையும் பதிலளிக்க உத்தரவிட்டது. இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி கூறிய நீதிபதி, வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தார். 


இதேபோன்று ஜெய்பீம் படத்தில் குறிப்பிட்ட சமூக மக்களின் மனதை புண்படுத்தும் விதமாகவும், வெறுப்பை தூண்டும் விதமாகவும் படத்தில் சில காட்சிகள் இடம்பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த குறிப்பிட்ட சமூகத்தை சுட்டிக்காட்டவே படத்தில் அக்னி குண்டமும், மகாலட்சுமி புகைப்படமும் இடம்பெற்றதாக கூறி சூர்யா மற்றும் ஞானவேல் ராஜா உள்ளிட்டோருக்கு எதிராக ருத்ர வன்னியர் சேனா அமைப்பினர், நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்திருந்தனர். இதன் காரணமாக படத்தில் இடம்பெற்றிருந்த அக்னி குண்டம் காட்சி நீக்கப்பட்டது.