லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. த்ரிஷா, பிரியா ஆனந்த், கெளதம் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத், சாண்டி மாஸ்டர் , மிஷ்கின், மன்சூர் அலிகான் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்திருப்பதாக படக்குழு தகவல் வெளியிட்டிருந்தது. ஆனால் படக்குழு தெரிவிக்காத சில நடிகர்கள் படத்தில் திடீரென்று வந்து ரசிகர்களுக்கு சின்ன சின்ன சர்ப்ரைஸ் கொடுக்க முயற்சித்தார்கள். மடோனா செபாஸ்டியன், அனுராக் காஷ்யப், மாயா கிருஷ்ணன், ஜார்ஜ் குட்டி என பல கதாபாத்திரங்களில் நடித்துள்ளது ரசிகர்களுக்கு போனஸாக அமைந்தன.
மடோனா செபாஸ்டியன்
இதில் சில கதாபாத்திரங்கள் படத்தில் நடித்திருப்பது ரசிகர்களுக்கு முன்னதாகவே தெரிந்திருந்தாலும் படக்குழு கடைசி வரை அதை ஏற்றுக் கொள்ளாமல் சமாளித்தனர். லியோவின் தங்கை எலிசாவாக நடிகை மடோனா செபாஸ்டியன் திடீரென்று படத்தில் வந்து ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். கூடுதலாக நான் ரெடிதான் பாடலில் விஜயுடனும் ஆடியுள்ளார்.
பிரேமம் படத்தின் மூலமாக தென் இந்திய ரசிகர்களி மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார் மடோனா செபாஸ்டியன். நலன் குமாரசாமி இயக்கிய காதலும் கடந்து போகும் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்தார். இதனைத் தொடர்ந்து கவன், வானம் கொட்டட்டும், உள்ளிட்டப் படங்களில் நடித்தார். நீண்ட நாள் இடைவெளிக்கு பிறகு லியோ படத்தில் நடித்துள்ளார்.
விஜய் பற்றி
லியோ படத்தில் நடித்த தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட மடோனா செபாஸ்டியன் லியோ படத்தின் தான் நடிப்பது ரசிகர்களுக்கு தெரிந்த பின்னும் படக்குழுவினர் அதை சர்ப்ரைஸாக வைத்திருந்தது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறியுள்ளார். நடிகர் விஜய் செட்டில் குழந்தை மாதிரி இருப்பார் என்றும், நடிக்கும் போது வேற மனிதராக மாறிவிடுவார் என்றும் அவர் கூறியுள்ளார். ஹரோல்டு தாஸாக நடித்த அர்ஜுனை பார்த்து தான் பேச பயப்பட்டதாகவும் பின் அவரிடம் முதல்வன் படம் குறித்து பேசியதாகவும் மடோனா தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் எங்களை வேற ஒரு உலகத்திற்கு கூட்டிச் சென்றுவிடுவார் என்று மடோனா செபாஸ்டியன் கூறியுள்ளார்.
லியோ வசூல்
பலவித சவால்களுக்கு மத்தியில் வெளியான லியோ திரைப்படம் வெளியான முதல் நாளில் மட்டும் உலகளவில் ரூ 148 கோடி வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது. படத்தின் தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் இந்த தகவலை தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் இரண்டாவது மற்று வார இறுதி நாட்களில் லியோ படத்தின் வசூலைத் தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.