கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வேலைவாய்ப்பு முகாம்
விழுப்புரம் : டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 2023-24ம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் 100 சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டது. இதில் விழுப்புரம் மாவட்டத்திற்கு 3 சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்கள் 19.8.2023, 28.10.2023 மற்றும் 23.12.2023 ஆகிய தேதிகளில் நடத்த ஒதுக்கீடு செய்யப்பட்டு முதல் வேலை வாய்ப்பு முகாம் 19.8.2023 அன்று நடத்தி முடிக்கப்பட்டது. இதன் இரண்டாம் நிகழ்வாக வருகிற சனிக்கிழமை 28ம் தேதி விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை செஞ்சி அல்ஹிலால் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது.
150-க்கும் மேற்பட்ட முன்னணி வேலையளிக்கும் நிறுவனங்கள்
இந்த முகாமில் உற்பத்தி, தகவல் தொழில் நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட முன்னணி வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களின் காலிப் பணியிடங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர். இதில் 8, 10 மற்றும் 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்வித் தகுதியை உடையவர்களும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
முகாமில் கலந்துகொள்ள முன்பதிவு
முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலை தேடுபவர்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது தொலைபேசி (04146 -226417), 9499055906 மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம். எனவே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வேலைதேடும் இளைஞர்கள் மற்றும் வேலையளிக்கும் தனியார்துறை நிறுவனங்கள் இம்முகாமை பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.