தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். இவரது நடிப்பில் 2012ம் ஆண்டு உருவான திரைப்படம் மதகஜராஜா. இந்த படம் 2013ம் ஆண்டு ரிலீசாக இருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் இந்த படம் வெளியாகவே இல்லை.
மதகஜராஜா ரிலீஸ்:
இந்த நிலையில், பொங்கலுக்கு ரிலீசாக இருந்த அஜித்தின் விடாமுயற்சி படம் திரைக்கு வராது என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, போட்டி போட்டுக் கொண்டு படங்கள் பொங்கலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. அதில், யாருமே எதிர்பாராத வகையில் விஷால் நடித்த மதகஜராஜா படம் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டது.
இது விஷால் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாகவும், கோலிவுட் ரசிகர்களுக்கு ஆச்சரியமாகவும் இருந்தது. இந்த படத்தை பிரபல இயக்குனர் சுந்தர்.சி இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் விஷால் மை டியர் லவ்வரு என்ற ஒரு பாடலை பாடியிருப்பார். விஷால் முதன்முதலாக பாடிய பாடல் அந்த பாடல் ஆகும்.
வைரலாகும் விஷால் பாட்டு:
விஜய் ஆண்டனி இசையில் விஷால் பாடிய அந்த பாடல் மட்டும் அப்போது மேக்கிங் வீடியோவாக வெளியிடப்பட்டது. அந்த பாடல் அப்போது பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக, இடையில் விஷால் நான் அப்படி மூடு ஏத்தவா? என்று விஜய் ஆண்டனியிடம் கேட்டுவிட்டு ஹம்மிங் கொடுத்து பாடுவார்.
மதகஜராஜா ரிலீஸ் ஆக இருக்கும் தகவல் வெளியானதைத் தொடர்ந்து, தற்போது இந்த படத்தின் ட்ரெயிலரும், இந்த பாடல் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்தை ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரித்துள்ளது.
ஹிட் அடிக்குமா?
இந்த படத்தில் வரலட்சுமி, அஞ்சலி விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கிய வேடத்தில் மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி, சிட்டிபாபு, சீனு மோகன் நடித்துள்ளனர். விஷாலுடன் இணைந்து நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிகர் சந்தானம் நடித்துள்ளார்.
தற்போது, இந்த படத்தில் நடித்த பலரும் உயிருடன் இல்லை. சந்தானம் முழு நேர கதாநாயகனாக மாறிவிட்டார். சுந்தர் சி இந்த படத்தின் சாயலிலே அரண்மனை, கலகலப்பு என பல படங்களை இயக்கிவிட்டார். இந்த படம் ஹிட் ஆகுமா? அல்லது ரசிகர்களால் புறக்கணிக்கப்படுமா? என்பது பொங்கல் பண்டிகையில் தெரிய வரும். இந்த படம் வரும் 12ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.