சாக்லேட் பாயாக இருந்த மாதவனை ஆக்‌ஷன் ஹீரோவாக காட்டிய ‘ரன்’ படம் வெளியாகி இன்றோடு 21 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 


லிங்குசாமியுடன் இணைந்த மாதவன் 


2002 ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் மாதவன், மீரா ஜாஸ்மின், விவேக்,  அதுல் குல்கர்னி , ரகுவரன் மற்றும் அனு ஹாசன் ஆகியோர் நடிப்பில் ‘ரன்’ படம் வெளியாகியிருந்தது. அலைபாயுதே மற்றும் மின்னலே படம் மூலம் இளைஞர்களை கவர்ந்த மாதவனும், ஆனந்தம் படம் மூலம் பேமிலி ஆடியன்ஸை கவர்ந்த லிங்குசாமியும் இணைந்ததால் இப்படம் அனைத்து தரப்பு மக்களிடமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. வித்யாசாகர் இந்த படத்துக்கு இசையமைத்திருந்தார். 


படத்தின் கதை 


கல்லூரியில் சேர்வதற்காக திருச்சியில் இருந்து சென்னையில் திருமணமாகி இருக்கும் அக்கா அனுஹாசன் வீட்டுக்கு வருகிறார். மாமா ரகுவரனுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இருவரும் பேசிக் கொள்ள மாட்டார்கள். இதற்கிடையில் பஸ்ஸில் பார்க்கும் மீராஜாஸ்மின் மீது முதல் சந்திப்பிலேயே காதலில் விழுகிறார் மாதவன். மீரா ஜாஸ்மின் அண்ணன் அதுல் குல்கர்னி மிகப்பெரிய ரவுடி. தன் அண்ணனிடம் இருந்து காப்பாற்ற எச்சரித்தாலும் மாதவன் விடுவதாக இல்லை. ஒரு கட்டத்தில் அண்ணனை எதிர்க்கும் மாதவனின் தைரியம் பிடித்துப்போக மீராஜாஸ்மினும் காதலிக்க தொடங்குகிறார். இறுதியாக இருவரும் சேர்ந்தார்களா என்பதே இப்படத்தின் கதையாகும். 


வித்யாசாகரின் மாயஜாலம் 


ரன் படத்தின் பாடல் வரிகளை நா. முத்துக்குமார் , பா.விஜய் , தாமரை , யுகபாரதி , அறிவுமதி மற்றும் விவேகா  எழுத வித்யாசாகர் இசையமைத்தார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம் என்பது போல அசத்தலாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருந்தது. குறிப்பாக மாதவனின் அறிமுக பாடலாக வரும் தேரடி வீதியிலே பாடலில் ஒவ்வொரு மாநில பெண்களையும் நா.முத்துகுமார் அழகாக வர்ணித்திருப்பார். 


அதேபோல் நடிகர் விவேக்கின் காமெடி சிந்திக்க வைத்ததோடு மட்டுமல்லாமல் சிரிக்கவும் வைத்தது. வீட்டில் அப்பாவை கிண்டல் செய்து விட்டு தான் அவஸ்தை படும்போதெல்லாம் அப்பாவுடனான உரையாடலை நினைத்து ஃபீல் பண்ணும் காட்சி என அட்டகாசப்படுத்தியிருப்பார். 


கூடுதல் தகவல்கள் 


இயக்குநர் மணிரத்னத்தின் அறிவுறுத்தலுக்குப் பிறகு ரன் படத்தில் நடிக்க மாதவன் முடிவு செய்தார். இப்படத்துக்காக அவர் எட்டு கிலோ எடை குறைந்தார்.  ஜோதிகா முதலில் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க தேர்வு செய்யப்பட்ட நிலையில் இறுதியாக மீரா ஜாஸ்மினின் அறிமுகப்படமாக ரன் அமைந்தது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பாராட்டைப் பெற்ற ரன் படம் மாதவனின் சினிமா கேரியரில் மிகப்பெரிய இடத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.