மாவீரன் படத்தின்  ’வண்ணாரப்பேட்டையில..’ பாடல் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.


இரண்டாவது சிங்கிள்


மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர் ஜோடி முதன்முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் மாவீரன். இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் பாரதி சங்கர் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தின் முதல் பாடலான ‘வண்ணாரப்பேட்டையில..’ எனும் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.


பெப்பியான காதல் பாடலாக இந்தப் பாடல் உருவாகியுள்ள நிலையில், சிவகார்த்திகேயன் - அதிதி இருவருமே இணைந்து இந்தப் பாடலைப் பாடியுள்ளனர். யுகபாரதி வரிகளை எழுதியுள்ளார். ரகளையாக இவர்கள் இருவரும் இணைந்து பாடும் இந்தப் பாடலின் ஒலிப்பதிவு காட்சிகள், மற்றும் திரைப்படக் காட்சிகளும் இந்த லிரிக்கல் வீடியோவில் இடம்பெற்றுள்ளன.


 



ஜூலையில் ரிலீஸ்


கடந்த பிப்ரவரி மாதம் இந்தப் படத்தின் சீனா சீனா எனும் பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. வரும் ஜுலை 14ஆம் தேதி மாவீரன் படம் உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் - அதிதி உடன் நடிகர் மிஷ்கின் இந்தப் படத்தில் வில்லனாகவும் நடிக்கிறார்.


யோகிபாபு இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். யோகிபாபுவை கதாநாயகனானக் கொண்டு மடோன் அஸ்வின் எடுத்த முதல் படமான மண்டேலா தேசிய விருது வென்ற நிலையில் தற்போது இந்தப் படத்திலும் யோகி பாபு நடித்துள்ளார். தமிழ், தெலுங்கில் இப்படம் உருவாகியுள்ள நிலையில் முன்னதாக இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருந்தது.


வெற்றி தேவை!


இறுதியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் தமிழ் - தெலுங்கு மொழிகளில் உருவான பிரின்ஸ் திரைப்படம் சென்ற ஆண்டு தீபாவளிக்கு வெளியானது. வழக்கமான சிவகார்த்திகேயன் படங்களைப் போல் இந்தப் படமும் காமெடி ஜானரில் அமைந்திருந்த நிலையில், இப்படம் எதிர்பார்த்த அளவிலான வெற்றியை பெறவில்லை. இந்நிலையில், மாவீரன் திரைப்படத்தின் வெற்றியை எதிர்நோக்கி சிவகார்த்திகேயன் ரசிகர்கள் காத்துள்ளனர்.


முன்னதாக மாவீரன் திரைப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளதாகவும், நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் போட்டிப்போட உள்ளதாகவும் தகவல் வெளியானது.


தொடர்ந்து, ஜெயிலர் படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, தற்போது முன்கூட்டியே ஜுலை 14ஆம் தேதி மாவீரன் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


மாவீரன் படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன்ஸ் பணிகள் முழுவீச்சில் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை  ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க: Devan Movie: சொன்னபடி செய்த விஜயகாந்த்.. 100வது படத்தில் இயக்குநரான அருண் பாண்டியன்.. 21 ஆண்டுகளை நிறைவு செய்த ‘தேவன்’