ஆந்திர பிரதேச மாநிலத்தில் பிறந்த ஒரு மாடல் மங்கை. சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தின் மூலம் பயணத்தை தொடங்க வெள்ளித்திரையில் நடிக்க வேண்டும் என்ற தீராத ஆசையுடன் இருந்தவர். வணிக வரித்துறையில் துணை ஆணையராக இருந்தவரின் மகள் என்பதால் கடுமையான எதிர்ப்புகளையும் மீறி அவரது ஆசைக்கு பரிசளித்தது தெலுங்கு சினிமா. அந்த போராளி நடிகை தான் பிந்து மாதவி.
2008ம் ஆண்டு வெளியான 'அவ்வகை பிரியாணி' என்ற தெலுங்கு படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமான பிந்து மாதவிக்கு பல வாய்ப்புகள் தமிழ் சினிமாவிலும் கிடைத்தது. சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தவர் ஹீரோயினாக தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்தது 2012ம் ஆண்டு வெளியான கழுகு திரைப்படத்தில். முதல் படமே பாக்ஸ் ஆபிசில் வெற்றி நடை போட்டது. அதை தொடர்ந்து வாய்ப்புகள் குவிய கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், பசங்க 2 என பல படங்களில் சிறப்பான நடிப்பால் ஏராளமான ரசிகர்களை குவித்தார்.
2017ம் ஆண்டு வெளியான பிக் பாஸ் நிகழ்ச்சி முதல் சீசன் மூலம் வைல்ட் கார்டு போட்டியாளராக என்ட்ரி கொடுத்தார். 35 நாட்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் இருந்தாலும் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். ஐந்தாவது இடத்தை பிடித்தவருக்கு வாய்ப்புகள் காத்து கொண்டு இருந்தது.
திரைப்படங்கள், விளம்பரங்கள், ஈவென்ட் என படு பிஸியான பிந்து மாதவி ஓடிடி தளத்தில் ஒளிபரப்பான தெலுங்கு பிக் பாஸ் நான் - ஸ்டாப் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வின்னரானார். தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற முதல் பெண் போட்டியாளர் என்ற பெருமையை பெற்றார்.
தற்போது கைவசம் தமிழ் மற்றும் தெலுங்கு படங்கள், ஓடிடி இணைய தொடர்களில் நடித்து வருகிறார். ஒரு சில படங்கள் வெளியாக தயாராக இருக்கின்றன. நடிகையாக பிந்து மாதவிக்கு கிடைத்த பப்ளிசிட்டியை காட்டிலும் பிக் பாஸ் மூலம் பலரின் விருப்பமான ஒருவரானார் பிந்து மாதவி. இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு வாழ்த்துக்களை அலை கடல் போல குவித்து வருகிறார்கள் ரசிகர்கள்.