மண்டேலா திரைப்படத்துக்காக தேசிய விருது வென்ற இயக்குனர் மடோன் அஸ்வின். அவருடன் நடிகர் சிவகார்த்திகேயன் கூட்டணி சேர்ந்துள்ள திரைப்படம் ’மாவீரன்’. ப்ரின்ஸ் படத் தோல்வியால் சிறு சிறு சறுக்கலை சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் படத்தின் மீது அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடிக்க நடிகை சரிதா, இயக்குநர் மிஷ்கின், யோகி பாபு, டோலிவுட் நடிகர் சுனில் எனப் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மண்டேலா படத்திற்கு இசையமைத்த பரத் சங்கர் தான் மாவீரன் திரைப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.
அதி நவீன கேமரா :
சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு மாவீரன் படத்தின் சீனா சீனா எனும் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலும் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் ஆக்ஷன் காட்சிகளுக்காக அதிநவீன மோகோபாட் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின, இது போன்ற அதிநவீன மோகோபாட் கேமராக்கள் 'விக்ரம்' படத்திற்காக லோகேஷ் கனகராஜ் பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி :
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டதால் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டது. பக்ரீத் பண்டிகை ஸ்பெஷலாக ஜூன் 29-ஆம் தேதி வெளியாகும் என்றும் தகவல்கள் பரவி வந்தன. இது போன்ற வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மாலை 6 மணிக்கு புதிய அப்டேட் ஒன்றை மாவீரன் படக்குழு வெளியிடும் என்ற அறிவிப்பு ஒன்று வெளியானது. அதன்படி சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கம் மூலம் புதிய அப்டேட்டை தற்போது வெளியிட்டுள்ளார்.
வெளியானது ரிலீஸ் தேதி :
மாவீரன் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்ற அதிகாரப்பூர்வமான அப்டேட்டை தற்போது வெளியிட்டுள்ளார். "என் அருமை சகோதர சகோதரிகளே! உங்களை ஆகஸ்ட் 11-ஆம் தேதி சந்திக்கிறேன்... வீரமே ஜெயம் !" என தனது ட்விட்டர் பக்கம் மூலம் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். மேலும் படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது படக்குழு.இந்த தகவல் எஸ்கே ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. மாவீரன் திரைப்படம் மூலம் மீண்டும் ஒரு அதிரடி என்ட்ரி கொடுப்பர் சிவகார்த்திகேயன் என உறுதியாக காத்திருக்கிறார்கள் அவரின் ரசிகர்கள்.