தமிழ் சினிமா நாளுக்கு நாள் கவனத்தை ஈர்த்து வருகிறது. திரைக்கதை ரீதியாக மட்டுமின்றி தொழில்நுட்ப ரீதியாகவும் கவனம் பெற்று வரும் தமிழ் சினிமாவில் பல இயக்குனர்களின் மெனக்கெடல் அதிகமாகவே உள்ளது. படத்தின் ஒரு காட்சிக்கே பல யுக்திகளை பயன்படுத்தி வரும் இயக்குநர்களின் பட்டியலில் இணைந்துள்ளார் 'மண்டேலா' புகழ் மடோன் அஸ்வின். 



அதிநவீன இயந்திரங்களின் பயன்பாடு :


மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் 'மாவீரன்'. அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்துக்காக அதிநவீன மோகோபாட் கேமராக்கள் பயப்படுத்தப்பட்டுள்ளது. தானியங்கி முறையில் செயல்படும் இந்த இயந்திரங்களால் பார்வையாளர்களுக்கு ஒரு வித்தியாசமான உணர்வை கொடுக்க முடியும். இது போன்ற கேமராவை லோகேஷ் கனகராஜ் 'விக்ரம்' திரைப்படத்திற்காக பயன்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இப்படி பல சுவாரஸ்யமான அம்சங்கள் நிறைந்த மாவீரன் படத்தின் முதல் பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோ நேற்று மாலை வெளியானது. இது நிச்சயம் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஒரு திரை விருந்தாக அமையும் வகையில் அமர்க்களமாக இருந்தது. மண்டேலா படத்துக்கு இசையமைத்த பரத் சங்கர் மாவீரன் படக்குக்கும் இசையமைக்கிறார்.


'சீன் ஆ சீன்' :


சிவகார்த்திகேயன் நடித்த 'பிரின்ஸ்' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் அவர் அடுத்ததாக நடித்து வரும் மாவீரன் படம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அவரின் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் 'மாவீரன்' படத்தின் முதல் சிங்களாக 'சீன் ஆ சீன்' என்ற பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடல் பிப்ரவரி 17-ஆம் தேதியன்று பிறந்தநாள் காணும் படத்தின் தயாரிப்பாளர் அருண் விஸ்வாவை சிறப்பிக்கும் பொருட்டு வெளியாகவுள்ளது. 23 விநாடிகள் மட்டுமே கொண்ட இந்த வீடியோவை பார்க்கும்போது பாடல் கண்டிப்பாக தியேட்டரில் ரசிகர்களை ஆட்டம்போட வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.






மெயின் பிக்சர் விரைவில்  :


'மாவீரன்' திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்து வருகிறார். மேலும் இவர்களோடு இயக்குனர் மிஷ்கின், நடிகை சரிதா, டோலிவுட் நடிகர் சுனில், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் செம்ம குத்தலான முதல் பாடலின் ஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸ் ட்ராக் வீடியோ வெளியானதை தொடர்ந்து இதன் மெயின் பிக்சர் பிப்ரவரி 17ம் தேதி வெளியாகவுள்ளது.  மாவீரன் திரைப்படம் மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.