இன்று ஜூலை 25 ஆம் தேதி தமிழில் இரு படங்கள் வெளியாகியுள்ளன. ஒன்று வடிவேலு ஃபகத் ஃபாசில் நடித்துள்ள மாரீசன் மற்றொன்று விஜய் சேதுபதி  நித்யா மேனன் நடித்துள்ள தலைவன் தலைவி. இரு படங்களுக்கும் பாசிட்டிவான விமர்சனங்களே கிடைத்து வருகின்றன. இரு படங்களின் கதை மற்றும் விமர்சனங்களைப் பார்த்து  இந்த இரண்டு படங்களில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக எந்த படத்திற்கு நீங்கள் போகலாம் என்பதை முடிவு செய்யலாம் 

Continues below advertisement

தலைவன் தலைவி விமர்சனம் 

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி படத்திற்கு எப்போது குடும்ப ரசிகர்களிடம் பெரியளவில் வரவேற்பு இருந்து வருகிறது. ஆனால் சில நேரங்களில் விஜய் சேதுபதியின் படங்கள் எல்லா தரப்பிற்குமான படங்களாக இருப்பதில்லை. வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை 2 திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுக்களைப் பெற்றாலும் ஃபேமிலி ஆடியன்ஸை இந்த படம் கவரவில்லை. அதே நேரம் கடைசியாக வெளியான ஏஸ் திரைப்படமும் போதுமான கவனத்தை பெறவில்லை. அந்த வகையில் ஒரு பக்கா ஃபேமிலி என்டர்டெயினராக தலைவன் தலைவி படம் அமைந்துள்ளது 

பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி , நித்யா மேனன் , யோகிபாபு , சரவணன் , செம்பன் வினோத் என பல்வேறு நடிகர்கள் நடித்துள்ள படம் தலைவன் தலைவி. திருமணமான தம்பதியினர் தங்களுக்கு இடையில் ஏற்படும் பிரச்சனைகள் காரணமாக பிரிவதை நாம் அன்றாடம் பார்த்து வருகிறோம். அப்படியான ஒரு கதையை எடுத்து அதில் எக்கசக்கசமான நகைச்சுவையை கலந்து எமோஷனையும் கைவிடாமல் இந்த படத்தை இயக்கியுள்ளார் பாண்டிராஜ். நானும் ரவுடிதான் , இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களில் நாம் பார்த்து ரசித்த அந்த விஜய் சேதுபதியை இந்த படத்தில் பார்க்கலாம். அவருக்கு சற்றும் சளைக்காமல் நித்யா மேனன் நடித்துள்ளார். காமெடியான முதல் பாதி செண்டிமெண்ட்டான இரண்டாம் பாதி என ஃபேமிலி ஆடியன்ஸ் சிரித்து மகிழ ஏற்ற படம் தலைவன் தலைவி. சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் படத்திற்கு கூடுதல் பலம் . 

Continues below advertisement

மாரீசன்

சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வடிவேலு ஃபகத் ஃபாசில் இரண்டாவது முறையாக இணைந்து நடித்துள்ள படம் மாரீசன். முன்னதாக இருவரும் மாமன்னன் படத்தில் நடித்திருந்தது ரசிகர்களை கவர்ந்தது. ஆனால் மாமன்னன் படத்தில் எதிரிகளாக பார்த்ததை விட மாரீசன் படத்தில் இருவரையும் நண்பர்களாக பார்ப்பது ஒரு தனி அனுபவம் என்று சொல்லலாம். திருடனாகிய ஃபகத் ஃபாசில் வடிவேலுவிடம் இருக்கும் பணத்தை கொள்ளை அடிக்க நினைக்கிறார். அல்ஸைமர்ஸ் என்கிற ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்ட வடிவேலு ஃபகத் பாசிலின் வலையில் விழுந்து அவருடன் திருவண்ணாமலைக்கு பைக்கில் செல்ல சம்மதிக்கிறார். முதல் பாதிக்கு காமெடியாக செல்லும் கதை இரண்டாம் பாதியில் இருந்து ட்விஸ்ட் வைத்து விறுவிறுப்பான திருப்பம் எடுக்கிறது. வடிவேலு ஃபகத் ஃபாசில் கெமிஸ்ட்ரி அபாரமாக கைகூடியுள்ளது. கமர்சியல் படத்தின் விறுவிறுப்பு இல்லை என்றாலும் ஒரு நல்ல மலையாள படத்தை பார்த்த அனுபவத்தை அளிக்கிறது மாரீசன்.