தலைவன் தலைவி
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடித்துள்ள தலைவன் தலைவி இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. யோகிபாபு , சரவணன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைத்துள்ளார். கலகலப்பான ஃபேமிலி என்டர்டெயினராக உருவாகியிருக்கும் தலைவன் தலைவி திரைப்படம் ரசிகர்களை கவர்ந்ததா ? படத்தைப் பார்த்த ரசிகர்கள் என்ன விமர்சனம் சொல்லியிருக்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம்
தலைவன் தலைவி விமர்சனம்
முதல் பாதி
திருமணமான சில மாதங்களில் கணவன் மனைவிக்கு இடையில் தொடங்கும் சின்ன சின்ன பிரச்சனைகள் விவாகரத்து வரை செல்வதை மையமாக வைத்து உருவாகியுள்ளது தலைவன் தலைவி. நீண்ட நாட்களுக்கு பிறகு நாம் பார்த்து ரசித்த விஜய் சேதுபதியை இந்த படத்தில் பார்க்கலாம். இதற்குதானே ஆசைபட்டாய் பாலகுமாரா படத்தை நினைவுபடுத்துகிறது அவரது நடிப்பு. நித்யா மேனன் பேரரசி கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். யோகி பாபுவின் காமெடிகள் சூப்பராக வர்க் அவுட் ஆகியிருக்கின்றன.சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை ஒவ்வொரு காட்சியையும் மெருகேற்றுகிறது. குறிப்பாக போட்டாலே முட்டைய பாடல் ரசிகர்களிடம் பெரியளவில் வரவேற்பைப் பெறும் பாடலாக உள்ளது. நகைச்சுவை கலந்த ஒரு நல்ல காதல் கதைக்கான எல்லா அம்சங்களும் படத்தில் உள்ளன என தலைவன் தலைவி படத்தைப் பற்றி ரசிகர்கள் கூறியுள்ளார்கள்.
கணவன் மனைவி இடையிலான பிரச்சனைகளை முதல் பாதியில் காமெடியாகவும் இரண்டாம் பாதியில் உணர்வுப்பூர்வமாகவும் சொல்லியிருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ். விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் இருவரும் போட்டி போட்டு நடித்துள்ளார்கள். ஆனால் அதே நேரம் திரையில் அவர்கள் கெமிஸ்ட்ரி சூப்பராக உள்ளது. இடையில் திரைக்கதையில் சின்ன தொய்வு ஏற்பட்டாலும் இறுதி காட்சியில் படம் உச்சகட்ட நகைச்சுவையாக மாறுகிறது. விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் வெளியான விடுதலை 2 மற்றும் ஏஸ் ஆகிய படங்கள் வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்தன. அந்த வகையில் தலைவன் தலைவி படம் விஜய் சேதுபதிக்கு ஒரு பக்கா கமர்சியல் வெற்றிப்படமாக அமையும் என்பதை உறுதியாக சொல்லலாம்