மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் ‘மாமன்னன்’. இந்த படத்தின் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்துள்ளார். ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மேலும் வடிவேலு,ஃபஹத் ஃபாசில், லால், சுனில் உள்ளிட்ட பலரும் மாமன்னன் படத்தில் இணைந்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அறிவிப்பு வெளியானதில் இருந்தே இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
தொடர்ந்து ஷூட்டிங்கும் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளும் சில நாட்கள் முன்பு நிறைவடைந்தது. தொடர்ந்து மாமன்னன் படமானது ஜூன் 29 ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. முன்னதாக கடந்த ஜூன் 1 ஆம் தேதி மாமன்னன் படத்தில் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இதில் தமிழ் சினிமாவின் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். நடிகர்கள் கமல்ஹாசன், கவின், சிவகார்த்திகேயன், சூரி, இயக்குநர்கள் வெற்றிமாறன், கே.எஸ்.ரவிக்குமார், மிஸ்கின், விஜய் ஆண்டனி, தியாகராஜா குமாரராஜா, ஏ.எல்.விஜய், ரவிகுமார், பிரதீப் ரங்கநாதன், விக்னேஷ் சிவன், தயாரிப்பாளர்கள் கே.ராஜன், தேனாண்டாள் முரளி, கலைப்புலி எஸ்.தாணு, கே.ஆர். உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
வரும் ஜூன் 18 ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு இசை வெளியீட்டு விழாவானது சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக ராசா கண்ணு, ஜிகு ஜிகு ரயில், ‘கொடி பறக்கும் காலம்’ பாடலின் வரிகள் அடங்கிய வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு வடிவேலுக்கு கம்பேக் கொடுக்கும் படமாக மாமன்னன் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படம் நடிகர் உதயநிதியின் கடைசிப்படம் என்பதால் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறது. இப்படியான நிலையில் மாமன்னன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.