மாமன்னன் படத்தின் அடுத்த பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இரண்டே படங்களில் தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்து குறிப்பிடத்தக்க இயக்குநராக உருவெடுத்துள்ள மாரி செல்வராஜ் இயக்கத்தில், அடுத்தாக வெளியாகவுள்ள திரைப்படம் ‘மாமன்னன்’.
மாமன்னன்:
ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர்கள் வடிவேலு, ஃபகத் ஃபாசில், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முதன்முறையாக இப்படத்தில் மாரி செல்வராஜ் உடன் ஏ.ஆர்.ரஹ்மான் கைக்கோர்த்துள்ள நிலையில், இப்படத்தின் பாடல்கள் குறித்து பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
மேலும் நடிகர் வடிவேலு முதன்முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 'ராசாக்கண்ணு' எனும் பாடலை இப்படத்தில் பாடியுள்ள நிலையில், முன்னதாக இப்பாடல் வெளியாகி இணையத்தில் ஹிட் அடித்து லைக்ஸ் அள்ளியது. யுகபாரதி இப்பாடலை எழுதியுள்ள நிலையில், பாடல் வரிகளும் வடிவேலுவின் கிராமிய மற்றும் உணர்வுப்பூர்வமான குரலும் இணைந்து இப்பாடலுக்கு பெரும் ரசிகர்களைப் பெற்றுத் தந்துள்ளது.
நாளை மறுநாள்:
இந்நிலையில், மாமன்னன் படத்தின் அடுத்த பாடல் குறித்த அறிவிப்பு இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி, மாமன்னன் படத்தின் இரண்டாவது பாடல் நாளை மறுநாள் (மே.27) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இப்பாடல் ’ரெக்கே’ (Reggae) எனும் ஜமாய்க்கா இசை வடிவத்தில் அமைந்திருக்கும் எனவும் இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் வடிவேலுவின் குரலில் அமைந்து ஹிட் அடித்த பாடலைப் போல் இந்தப் பாடலிலும் ஏதாவது புதுமை இருக்குமா என எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துள்ளனர்.
முன்னதாக ரஹ்மான் போன்றவர் தன்னுடைய அரசியலைப் புரிந்துகொண்டு தன் உடன் இணைந்து பயணிப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் வரும் ஜூன் முதல் வாரத்தில் மாமன்னன் பட இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்றும், நடிகர் கமல்ஹாசன் இந்த விழாவில் கலந்துகொள்வார் என்றும் தகவல்கள் முன்னதாக வெளியாகின. மேலும் மாமன்னன் படம் வரும் ஜூன் 29ஆம் தேதி வெளியாகவும் எனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
உதயநிதி ஸ்டாலினின் கடைசி படம்:
முன்னதாக ஏப்ரல் மாத இறுதியில் இப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி கவனம் ஈர்த்தன. இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்கெனவே இதுதான் தன் கடைசி படம் என அறிவித்துவிட்டதால் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், இந்த விழாவில் கமல்ஹாசன் பங்கேற்பார் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மாரி செல்வராஜ் அடுத்ததாக குழந்தைகளை மையப்படுத்திய வாழை எனும் படத்தினை தயாரித்து இயக்கி வருகிறார். இந்தப் படமும் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து துருவ் விக்ரம் மற்றும் தனுஷ் உடன் மீண்டும் இணையும் படத்தில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.