மாமன்னன் திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் வசூலைக் குவித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் என பலரும் நடித்துள்ள திரைப்படம் மாமன்னன்.


சென்ற ஜூன் 29ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியான நிலையில், இப்படம் தொடர்ந்து இணையத்தில் பேசுபொருளாகி வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில் இப்படத்தின் பாடல்களும் கவனமீர்த்து பாராட்டுகளை அள்ளி வருகின்றன. 


ஒருபுறம் அரசியல் தலைவர்கள், திரைத்துறை நட்சத்திரங்கள் தொடங்கி தமிழ் சினிமா ரசிகர்கள் வரை இப்படம் பல தரப்பினர் மத்தியிலும் பாராட்டுகளை அள்ளி வருகிறது. ஆனால் மற்றொருபுறம், பரியேறும் பெருமாள் அளவுக்கு இல்லை இப்படம் என்றும், மாரி செல்வராஜ் இன்னும் சிறப்பாக படத்தை  எடுத்திருக்கலாம் என்றும் சினிமா ஆர்வலர்கள் மற்றும் ஒரு தரப்பு இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


மேலும் உதயநிதி ஸ்டாலினின் அரசியல் பயணத்துக்கு இப்படம் பெரும் உதவி புரியும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், மற்றொருபுறம் இப்படம் அதிமுகவைச் சேர்ந்தவரும் முன்னாள் சபாநாயகருமான தனபாலின் கதை என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இப்படி பாசிட்டிவ், நெகட்டிவ், அரசியல் கருத்துகள் தாண்டி இப்படம் வசூல் ரீதியாக பட்டையைக் கிளப்பி வருகிறது.  அதன்படி கடந்த 8 நாள்களில் மாமன்னன் திரைப்படம் இந்தியா முழுவதும் 38.21 கோடிகளை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


பாக்ஸ் ஆஃபிஸ் தரவுகளை வெளியிடும் sacnilk தளத்தின் தகவல்களின்படி மாமன்னன் திரைப்படம் முதல் நாள் 8.5 கோடிகளும், இரண்டாம் நாள் 5.1 கோடிகளும், மூன்றாம் நாள் 7 கோடிகளும், நான்காம் நாள் 7.8 கோடிகளும், ஐந்தாம் நாள் 2.9 கோடிகளும், ஆறாம் நாள் 2.7 கோடிகளும், ஏழாம் நாள் தோராயமாக 2.23 கோடிகளும், எட்டாம் நாள் தோராயமாக 1.98 கோடிகளையும் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


 






மேலும் வரும் இரண்டாம் வார இறுதியில் இப்படம் மேலும் அதிகம் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்நிலையில் இப்படம் தமிழில் நல்ல வரவேற்பைப் பெற்று பாராட்டுகளை அள்ளி வருவதை ஒட்டி தெலுங்கில் டப் செய்து வெளியாக உள்ளது. அதன்படி வரும் ஜூன் 14ஆம் தேதி இப்படம் தெலுங்கில் ‘நாயக்குடு’  எனும் பெயரில் வெளியாக உள்ளது.


 ஃபஹத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் இருவருக்கும் ஏற்கெனவே டோலிவுட்டில் ரசிகர் பட்டாளம் உள்ள நிலையில், இப்படம் தெலுங்கிலும் மாஸ் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.