மாமன்னன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ் பற்றி நடிகர் கமல்ஹாசன் பேசியது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் “மாமன்னன்”. இந்த படத்தில் வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபஹத் ஃபாசில், லால், சுனில் என ஏகப்பட்ட பேர் நடித்துள்ளனர். இந்த படம் இம்மாதம் இறுதியில் திரைக்கு வர உள்ளது. இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில், மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். மேலும் இயக்குநர்கள் வெற்றிமாறன், கே.எஸ்.ரவிக்குமார், மிஸ்கின், விஜய் ஆண்டனி, தியாகராஜா குமாரராஜா, ஏ.எல்.விஜய், ரவிகுமார், பிரதீப் ரங்கநாதன், விக்னேஷ் சிவன், பிரியதர்ஷன் நடிகர்கள் கவின், சிவகார்த்திகேயன், சூரி, விஜயகுமார், தயாரிப்பாளர் போனி கபூர் என ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கமல்ஹாசன், ”இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிற எல்லோரும் கீர்த்தி சுரேஷை பார்த்து அழகாக இருக்கிறார் என சொன்னார்கள். அது கொஞ்சம் மேக்கப் போட்டுகொண்டால் அழகாகத்தான் தெரிவார்கள். ஆனால் அறிவோடு இருக்க வேண்டும். அழகோடு அறிவும் சேர்ந்து இருந்தால் அது தான் பேரழகு. இது கீர்த்திக்கு அமைந்திருக்கிறது. இந்த மாதிரி படங்களை நீங்கள் தேர்ந்தெடுத்து நடிப்பதனால் உங்களுக்கு அழகோடு சேர்ந்து அறிவும் இருக்கிறது என்பது நிரூபிக்கப்படுகிறது.
இந்த படத்துல ஏ.ஆர்.ரஹ்மான் தன் பங்கு திறமையை நிரூபிக்க ஒரு பெரிய இடத்தை மாரி செல்வராஜ் வழங்கியுள்ளார்.படத்துல நிறைய எமோஷனல் சீன் நிறைய இருக்கு. கோபம் வரக்கூடிய சீன்களும் இருக்கிறது. இந்த உரையாடல் நடக்க வேண்டிய உரையாடல். எனக்கு மாரி செல்வராஜ் கிட்ட பிடிச்சது என்னவென்றால், எதிர்தரப்பு என்ற ஒன்றை நிர்ணயித்துக் கொள்ளாமல், இது நிகழும் நிஜம், இது மாற வேண்டும் என எதிர்தரப்புக்கு கூட சமமான இடம் கொடுக்க முயற்சி பண்றீங்க. கோபத்துல அதெல்லாம் தோணாது. அது உங்களுக்கு தோன்றியுள்ளது என்பது சமநிலையை காட்டுகிறது.
நாம சண்டை போடும்போது நம்ம பக்கம் நியாயம் இருக்க வேண்டும். கோபம் மட்டும் இருந்தா போதாது. மாரி பக்கம் நியாயம் இருக்குது. அதற்கு வழி அமைத்து கொடுத்த உதயநிதிக்கு நன்றி என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.