கடந்த குளிர் காலத்தில் RSV மற்றும் கோவிட் 19 பரவி உலகை அச்சுறுத்தியது. இந்த கோடையில் அமெரிக்காவில் ஒரு புதுவித ஃப்ளூ பரவி நுரையீரல் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்க நோய்த் தடுப்பு மற்றும் கண்காணிப்பு மையமானது ஹியூமன் மெடா நிமோனோ வைரஸ் (எச்எம்பிவி) பரவி வருகிறது என்று எச்சரித்துள்ளது.
மார்ச் மாதத்தில் ஃப்ளூ தொந்தரவு அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டவர்களில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மாதிரிகளில் 11 சதவீதம் மாதிரிகள் HMPV பாதிப்பு என்று உறுதியானது.
இந்த வைரஸ் குறித்து அறிய வேண்டிய 10 தகவல்கள்
1. ஹியூமன் மெடா நிமோ வைரஸானது வயது வித்தியாசமின்றி மனிதர்கள் அனைவருக்குமே நுரையீரல் பாதிப்பை ஏற்படுத்தலாம். வயதானவர்கள் மற்றும் குறைந்த நோயெதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.
2. HMPV வைரஸ் தொற்று ஏற்பட்டால் இருமல், காய்ச்சல், மூக்கடைப்பு மற்றும் மூச்சுத் திணறல் ஏற்படும்.
3. இப்போதைக்கு அமெரிக்காவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
4. இந்த நோயை ஆரம்ப நிலையிலேயே கவனிக்கவில்லை என்றால் இது ப்ரான்கிட்டிஸ் மற்றும் நிமோனியாவை ஏற்படுத்தும்.
5. இந்த வைரஸ் தொற்றியதிலிருந்து 3 முதல் 6 நாட்களுக்குள் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும்.
6. HMPV வைரஸானது இருமல், தும்மல், தொடுதல், கைகுலுக்குதல் போன்றவற்றால் நோய் பாதித்தவரிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவும்.
7. இந்த வகை வைரஸ் குளிர் காலத்தில் பரவ ஆரம்பித்து இளவேனிர் காலம் வரை வேகமாகப் பரவும்.
8. கோவிட் 19 வைரஸைப் போல் இதற்கு ஆன்ட்டி வைரல் தெரபி ஏதுமில்லை. மாறாக மருத்துவர்கள் கடுமையான நோயாளிகளை அவர்களுக்கு ஏற்படும் நோய் தீவிரத்தைப் பொறுத்தே சிகிச்சைக்கு உட்படுத்த முடியும்.
9. இந்த வைரஸில் இருந்து தற்காத்துக் கொள்ள கொரோனா வைரஸைப் போலவே கைகளைக் கழுவுதல், கைகளை சுத்தப்படுத்தாமல் கண், மூக்கு, வாய் ஆகியனவற்றை தொடாமல் இருத்தல், நோய் பாதித்தவரிடம் தொடர்பில் இல்லாமல் இருத்தல் போன்றவற்றை பின்பற்ற வேண்டும்.
10. நியூயார்க்கில் நடத்தப்பட்ட ஆய்வில், வயதானவர்களுக்கு HMPV உயிரைப் பறிக்கும் நிமோனியா பாதிப்பை ஏற்படுத்தும்.