சமூக நீதியை சினிமாவில் பேசியதால் தான் சமூக நீதிக்கு எதிரானவங்களை நாம் எதிர்க்க முடிகிறது என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
மாமன்னன் இசை வெளியீட்டு விழா
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “மாமன்னன்”. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஜூன் 1) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். மேலும் இயக்குநர்கள் வெற்றிமாறன், கே.எஸ்.ரவிக்குமார், மிஸ்கின், விஜய் ஆண்டனி, தியாகராஜா குமாரராஜா, ஏ.எல்.விஜய், ரவிகுமார், பிரதீப் ரங்கநாதன், விக்னேஷ் சிவன் நடிகர்கள் கவின், சிவகார்த்திகேயன், சூரி என ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
சினிமாவில் சமூக நீதி
இந்நிகழ்வில் பேசிய வெற்றிமாறன், “தமிழ்நாட்டுல மட்டும் தான், தமிழ் ரசிகர்கள் மட்டும் தான் கொஞ்சம் வழக்கமான படங்களை எடுக்காமல், கொஞ்சம் இந்த மாதிரி படம் எடுக்குற படைப்பாளர்களையும் ரசிக்கிறாங்க. தமிழ் சினிமாவின் ரசிகர்கள் தான் உலக ரசிகர்களுக்கு முன்னோடி என அடிக்கடி சொல்லுவேன். அது கமல்ஹாசனுக்கு நன்றாக தெரியும். அவரின் பல பரிசோதனைகளை நாம் ரசித்திருக்கிறோம். அந்த வகையில் சமூக நீதிகளை பேசுகிற படங்களை எடுத்து வணிக ரீதியான வெற்றியை கொடுக்க முடியும் அப்படிங்கிறது
தமிழ்நாட்டில் மட்டும் தான். வேற எங்கேயும் நடக்காது அது. சினிமாவில் மட்டுமல்லாது அது சமூகத்திலும் முக்கியமான இடத்தை கொடுக்கிறது தமிழ்நாடும், தமிழ் ரசிகர்களும் மட்டும் தான். அந்த வரிசையில் வருபவர் தான் மாரி செல்வராஜ். முதல் 2 படங்களாக இருக்கட்டும். இந்த படமாக இருக்கட்டும். அடுத்து பண்ணப்போகிற படமாக இருந்தாலும் இப்படி தான் செயல்பட போகிறார். இந்த படம் ரொம்ப ஸ்பெஷல்.
ஏன்னா, மாமன்னன் படத்தோட டைட்டில் ரோல் உதயநிதி பண்ணவில்லை. அதை செய்றது வடிவேலு தான். அவர் வந்து தமிழ் சினிமாவுல இருக்கிற ரொம்ப கம்மியான ஒரிஜினல் நடிகர்களில் ஒருவர். அவரை வந்து ஒரு சீரியஸ் ரோல்ல பார்க்கணும்ன்னு நான் ஆசைப்பட்டேன். உதயநிதி இல்லைன்னா அவர் இந்த கேரக்டரை ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார் என நினைக்கிறேன்.
இந்த மாதிரி நடிச்சது, தமிழ் சினிமாவில் புதிதாக படம் பண்ண நினைக்கிறவங்க இதை விட சிறப்பான கதையோட வருவாங்க. அது ரொம்ப ஸ்பெஷலா இருக்கும். வடிவேலு தமிழ் மொழிக்கே தன்னை அர்ப்பணிக்கிறாரு என சொல்லணும். அவரின் நகைச்சுவை தான் மதுரை வட்டார மொழியை எனக்கு புரிய வைத்தது. இப்படி ஒரு டீம் அமைத்து அதில் தன்னுடைய பெயரை கடைசியில் போட்டது பெரிய விஷயம் (போஸ்டரில் உதயநிதி பெயர் கடைசியில் இருப்பதை குறிப்பிட்டு சொன்னார்) ஒன்றிற்காகவே அவரை பாராட்ட வேண்டும்.
நீங்க இதன்பிறகு நடிக்கிறீங்களோ இல்லையோ இந்த மாதிரி படங்களில் வர்றதுக்கான வசதிகளை பண்ணி கொடுக்கணும். சமூக நீதியை சினிமாவில் பேசியதால் தான் இந்த மாதிரி சமூக நீதிக்கு எதிரானவங்களை தமிழ்நாட்டில் இருந்து நாம் எதிர்க்க முடிகிறது. தொடர்ந்து இதுபோன்ற படங்கள் வரவேண்டும். அதற்கு ரசிகர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் வெற்றிமாறன் கூறினார்.