உலக அளவில் சாதனை படைத்தவர்கள், பிரபலமான விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலகைச் சார்ந்தவர்கள் என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்களாக வெளியாவது சமீப காலமாக ட்ரெண்டாகி வருகிறது. அந்த வகையில் கர்நாடக இசை உலகில் முடிசூடா ராணியாக சிறந்து விளங்கிய பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளது.  


 




தேனினினும் இனிமையான குரலால் உலகெங்கிலும் உள்ள கோடான கோடி ரசிகர்களின் நெஞ்சங்களில் இன்றும் குடி இருப்பவர். அனைத்து இந்திய மொழிகளிலும் இவர் பாடியுள்ளார் என்பது அவருக்கே உரித்தான தனிச்சிறப்பு. அவருடைய 10ஆவது வயதில் முதல் பாடல் ரெக்கார்டிங் செய்யப்பட்டு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. ஸேவாஸ்தனம், சகுந்தலை, சாவித்திரி, மீரா, மீராபாய், உள்ளிட்ட படங்களின் மூலம் அவரின் நடிப்புத் திறமையையும் இந்த நாடறிந்தது. 


கச்சேரி, திரைப்பாடல்கள், ஆன்மீகப் பாடல்கள் முதல் தேசப்பற்று பாடல்கள் வரை அவரின் குரல் புகுந்து விளையாடியது. இன்றும் திருப்பதி தேவஸ்தானத்தில் எம்.எஸ். சுப்புலட்சுமியின் சுகந்த குரலில் தினமும் அதிகாலையில் ஒலிக்கிறது 'சுப்ரபாதம்'. அவர் பாடிய ‘அலைபாயுதே கண்ணா’ , ‘குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா’ பாடல்களைக் கேட்டால் கடவுளே கீழே இறங்கி வரும் அளவுக்கு தெய்வீகமாக இருக்கும்.    


 



 


இசையில் அவரின் பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் பத்ம பூஷன், சங்கீத கலாநிதி, பத்ம விபூஷன், பாரத ரத்னா உள்ளிட்ட ஏராளமான உயரிய விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார். 2004ஆம் ஆண்டு  உடல்நலக்குறைவால் அவரின் 88வது வயதில் காலமானார். இந்நிலையில், காலத்தால் அழியாத ஒரு பொக்கிஷமாக கொண்டாடப்படும் எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு படமாக வெளியாக உள்ளது.


இது குறித்த அறிவிப்பு பல ஆண்டுகளுக்கு முன்னரே வெளியானது. நடிகை வித்யா பாலன், எம்.எஸ். சுப்புலட்சுமியின் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்ற பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால் அவை எதுவும் செயற்பாட்டில் இல்லாமல் போனது. 


 



தற்போது மீண்டும் எம்.எஸ். சுப்புலட்சுமியின் பயோபிக் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. பெங்களூருவைச் சேர்ந்த நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் அதன் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் திரைக்கதை எழுதும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 


எம்.எஸ். சுப்புலட்சுமியின் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகை த்ரிஷா, நயன்தாரா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோரிடம் அணுகப்பட்டதாக கூறப்படுகிறது. விரைவில் யார் எம்.எஸ். சுப்புலட்சுமி கேரக்டரில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரம்மாண்டமான தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.