கோயில்களின் நகரம் என சிறப்பு பெற்ற காஞ்சியில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வடகலை - தென்கலை பிரிவினர் இடையே ஏற்பட்ட 2 வது நாளில் ஏற்பட்ட மோதல் வீதிக்கு வந்தது. டிக்ஸ்னரியில் கூட காண முடியாத வார்த்தைகளையும், இலக்கண புத்தகத்தில் கூட கண்டுபிடிக்க முடியாத நா கூசும் அவ சொற்களையும் , பொதுமக்கள் மத்தியில் வடகலை தென்கலையினர் பேசிய பேச்சை கண்டு காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.
வடகலை - தென்கலை
கோயில் விழாக்களில் திவ்ய பிரபந்தமோ, வேத பாராயணமோ இரு பிரிவினரும் கோஷ்டிகள் பாட கூடாது என கோயில் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. நேற்று கங்கைகொண்டான் மண்டபத்தில் மண்டகப்படி கண்டருளி பக்தர்களுக்கு வரதர் காட்சி அளிக்கும்போது, தாத்தாச்சாரி குடும்பத்தினர் "மந்திர புஷ்பம்" எனும் வேத மந்திரங்களை பாட தென் கலை பிரிவினரும் பாடுவோம் என கூற வாக்குவாதம் ஏற்பட்டது. கோவில் நிர்வாகத்தின் உத்தரவையும் மீறி வேத பாராயணம் செய்ததால் காவல்துறையினர் சமாதானம் செய்து வைத்தனர்.
" நா கூசும் வார்த்தைகளால் "
இந்நிலையில், கோவிலில் இருந்து வரதர் கிளம்பி சுமார் 12 வீதிகள் வழியாக அருள் பாலித்த படி, பேருந்து நிலையத்தை நோக்கி வந்து கொண்டிருந்தபோது, இரண்டாவது நாளாக மீண்டும் தென்கலை - வடக்கலை இடையே கடும் மோதல் ஏற்பட்டது. சுற்றிலும் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் உள்ளனர் என்பதை கூட பார்க்காமல், வடகலை - தென்கலை என இரு பிரிவினரும் பேசவே "நா கூச்சம் அவ சொற்களை" மக்கள் மத்தியில் மாறி மாறி பேசி திட்டி கொண்டனர்.
கோயில் நிர்வாகிகள் முன்னிலையில்
பல ஆண்டுகளாக கோயில் வளாகத்துக்குள்ளையே நடந்த இந்த வாக்குவாதம் தற்போது வீதிக்கு வந்துவிட்டது என பொதுமக்கள் புலம்புகின்றனர். நீதிமன்ற வழிகாட்டல்கள் இருந்தும் இந்த பிரச்சனைக்கு இந்து சமய அறநிலையத்துறை செயலாளரோ அல்லது அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்களோ தீர்வு காண ஏன் முற்படவில்லை என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். வடக்கலை தென்கலை பிரச்சினையால் நாங்கள் முழு மனதுடன் பெருமாளை தசிக்க முடியவில்லை என பக்தர்கள் புலம்புகிறார்கள். இந்த மோசமான சம்பவங்கள் அனைத்தும் கோவில் நிர்வாகிகள் முன்னிலையில் நடந்து வருகின்றன.
முகம் சுளிக்கும் பக்தர்கள்
தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற வடகலை மற்றும் தென்கலை இரு பிரிவினருக்கு இடையே பலதரப்பு பிரச்சனைகள் நடந்த வண்ணம் உள்ளன. இதனால் நிம்மதியாக சாமியை தரிசிக்க வரும் பக்தர்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். சில சமயங்களில் எல்லை மீறி தகாத வார்த்தைகளில் பேசி கொள்வதும், அவ்வப்பொழுது அரங்கேறுவதால் பொதுமக்களும் பக்தர்களும் அவதி அடைகின்றனர்.
பத்து நாட்கள் நடக்கும் உற்சாகங்களில் முன்பெல்லாம் ஏதாவது ஒரு நாட்களில் மட்டுமே இது போன்ற சண்டையில் இரு பிரிவினரும் ஈடுபட்டு வந்தனர். ஆனால் இந்த ஆண்டு நடைபெறும் வைகாசி பிரம்மோற்சவ விழாவில் தினமும் இரண்டு பிரிவினரும் சண்டை போட்டு வருவது, பக்தர்களிடையே எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. கடவுள் முன்னால் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள், இருக்கிறது நிம்மதியாக சாமி தரிசனம் மேற்கொள்ள முடியவில்லை என பக்தர்கள் புலம்புகின்றனர்