நடுத்தர குடியிருப்புகளில் வசிக்கும் பெரும்பாலான நடுத்தர மக்கள் அன்றாடம் சந்திக்கும் ஒரு பிரச்சினை பார்க்கிங். அதை கருவாக கொண்டு அறிமுக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் மிகவும் யதார்த்தமாக சொல்லி இருக்கும் திரைப்படம் தான் 'பார்க்கிங்'. நேற்று வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து வருகிறது. 


 



ஹரிஷ் கல்யாண், இந்துஜா ரவிச்சந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், ரமா ராஜேந்திரன், பிராத்தனா நாதன். இளவரசு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில் இரு குடும்பத்திற்கு இடையே ஏற்படும் பார்க்கிங் பிரச்சினை எப்படி பெரிதாகி தீயாய் கொழுந்து விட்டு எரிந்து, எல்லையை கடந்த மோதல் ஏற்பட்ட பிறகு, பிரச்சினை சுமூகமாக முடிந்ததா அல்லது தொடர்ந்ததா என்பதை சொல்லிய படம் தான் பார்க்கிங்.


இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் முதிர்ச்சியுடன் கலக்கி இருந்தாலும் ஏற்கெனவே நடிப்பில் பிஹெச்.டி பெற்ற நடிகர் எம்.எஸ். பாஸ்கரின் நடிப்பு பற்றி சொல்லித் தெரிய தேவையே இல்லை. பார்க்கிங் திரைப்படத்தில் நடிகர் எம்.எஸ். பாஸ்கரின் நடிப்பு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் குவித்து வருகிறது. 'நான்' என்ற அகம்பாவம் கொண்ட அரசு அதிகாரியாக எம்.எஸ். பாஸ்கர் கலக்கி உள்ளார். அவருக்குள் இருக்கும் ஆற்றாமை, வன்மன், கோபம் அனைத்தையும் மிக அழகாக தன்னுடைய அனுபவ நடிப்பால் பின்னிப் பெடலெடுத்துவிட்டார். 


எம்.எஸ். பாஸ்கரின் நடிப்பை பாராட்டி இணையத்தில் ட்வீட்கள் குவிந்து வருகின்றன. 


 






"இவருக்கெல்லாம் நிறைய படத்துல வாய்ப்பு கொடுத்து இருக்கலாம். நடிப்பு அரக்கன்"


"மோதலில் துவங்கிய இவரின் தெறிக்கவிடும் பர்ஃபார்மன்ஸ் படம் முழுக்க தொடர்ந்தது"


"மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்"


 






 


"அதிகம் கொண்டாடப்படாத குறைத்து மதிப்பிடப்பட்ட கலைஞர்களில் ஒருவர் எம்.எஸ்.பாஸ்கர். நகைச்சுவையாக இருந்தாலும் சரி, உணர்ச்சியாக இருந்தாலும் சரி, அந்த கதாபாத்திரத்தை அவர் முழுமையாக செய்யக்கூடியவர்"


"மிக சிறந்த துணை நடிகர் "


 



லோகேஷ் கனகராஜ் விருப்பம் :


பார்க்கிங் படத்தின் பிரஸ் மீட் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் "எனக்கு எஸ்.எஸ்.பாஸ்கர் சாரை இயக்க வேண்டும் என ஆசை" எனக் குறிப்பிட்டு பேசியிருந்தார். அதற்கு பதிலளித்த எம்.எஸ். பாஸ்கர் "எங்க அண்ணன் கமல்ஹாசன், தளபதி விஜய் போன்றவர்களையே இயக்கி விட்டீர்கள். என்னை இயக்க நீங்கள் ஆசைப்படுவதாக சொன்னது மிகப் பெரிய வார்த்தை. எனக்கும் உங்களுடன் பயணிக்க ஒரு வாய்ப்பு கொடுங்கள். நிச்சயமாக நடிக்கிறேன். வயதில் மிக இளையவர் என்றாலும் மிகவும் புகழ் பெற்றவர். இன்னும் பெற போகிறவர்" என பேசி இருந்தார். 


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விரைவில் எம்.எஸ். பாஸ்கரை நாம் பார்க்கலாம் என்பது புரிந்தது.