கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்றும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 20 செ.மீ மேல் அதி கன மழை பதிவாகும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தேனி, விருதுநகர் மாவட்டங்களுக்கு மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு கன மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் அதி கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இம்மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. தென் மாவட்டங்களில் 37 இடங்களில் அதி கன மழை பதிவாகி உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வெள்ளத்தில் மூழ்கிய குடியிருப்பு பகுதிகள்
திருநெல்வேலி மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. தாமிரபரணி ஆற்றை ஒட்டிய வடக்கு புறவழிச்சாலையில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் கழுத்தளவு மழை நீர் சூழ்ந்துள்ளது. வீடுகளில் சிக்கியிருக்கும் மக்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக, மணிமுத்தாறு அணையில் இருந்து 10,000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
நெல்லையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து கொடுத்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மையிலாடி - அஞ்சுகிராமம் சாலை, கோழிகோட்டு பொத்தை - தோவாளை சாலைகளில் மழை வெள்ளம் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்த சாலைகள் வழியே போக்குவரத்து முடக்கம் அடைந்துள்ளது.
முடங்கிய ரயில் போக்குவரத்து
மேலும் கன மழை காரணமாக தென் மாவட்டங்களில் ரயில் போக்குவரத்து முடங்கியது. சென்னை-குருவாயூர் எக்ஸ்பிரஸ், திருச்சி- திருவனந்தபுரம், நாகர்கோவில்-கோவை எக்ஸ்பிரஸ் ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. தாம்பரம் செங்கோட்டை விரைவு ரயில் விருதுநகர், ராஜப்பாளையம் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடியில் இருந்து புறப்படும் முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. ரயில் தண்டவாளத்தின் கீழ் உள்ள கற்களை மழை வெள்ளம் அரித்துச் சென்றதாலும், சில இடங்களில் தண்டவாளங்கள் சேதம் அடைந்ததாலும், ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
CM Stalin: ”சென்னை அனுபவத்தின் மூலம் தென்மாவட்ட மக்களை மீட்போம்” - முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி