முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்-கருணாநிதி இடையேயான நட்பையும், விரோதத்தையும் பலரும் பலவிதமாக தெரிவிப்பார்கள். அரசியலில் எம்.ஜி.ஆர்., அடியெடுத்து வைத்த போது, அவருக்கு பலமாக இருந்தது அவரது சினிமா பலம். அதே சினிமாவில் இருந்தும் கருணாநிதிக்கு அவரது சினிமாப்புகழ் பலனளிக்கவில்லை. மாறாக, அவரின் ஆற்றல் தான் அவருக்கு பலம் தந்தது. எம்.ஜி.ஆர்., என்கிற நடிகன், தமிழக மக்களின் மனதில் ஆழமாக பதிந்த போது, அது தான் அவரின் பலமாக பார்க்கப்பட்டது.
அந்த பலத்தை பகிர நினைத்து, தன் மூத்த மனைவியான பத்மாவதியின் மகனான மு.க.முத்துவை தன் கலை வாரிசாக சினிமாவில் களமிறக்கினார் கருணாநிதி. அஞ்சுகம் பிக்சர்ஸ் சார்பில் முரசொலி செல்வம் தயாரிக்க, கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் உருவானது பூக்காரி திரைப்படம். மு.க.முத்து நடிப்பில், அவருக்கு ஜோடியாக மஞ்சுளா நடித்திருந்தார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த இத்திரைப்படம், 1973 அக்டோபர் 25 இதே நாளில் வெளியானது. கிட்டத்தட்ட 49 ஆண்டுகளுக்கு முன், இதே நாளில் எம்.ஜி.ஆர்.,க்கு போட்டியாக களமிறங்கினார், கருணாநிதியின் மகன் என்று கூறுவது தான் பொருத்தமாக இருக்கும்.
டி.என்.பாலு கதை வசனம் எழுதிய பூக்காரி திரைப்படத்தில் அறிமுகமான மு.க.முத்து, அச்சுஅசல் எம்.ஜி.ஆர்., பாணியை பின்தொடர்ந்தார். நடை, உடை, பேச்சு என அனைத்தும் அப்படியே எம்.ஜி.ஆர்., ஃபார்மட்டில் இருந்து. தனக்கு எதிராக நகர்த்தப்படும் இந்த கலை காய்நகர்த்தலை புரிந்து கொண்ட எம்.ஜி.ஆர்., பிந்நாளில் கருணாநிதி உடன் கருத்துவேறு ஏற்படும் அளவிற்கு நகர்ந்து போக, இதுவும் ஒரு முக்கிய காரணமானது என்பார்கள்.
அதனால் தான், பூக்காரி படத்தை எம்.ஜி.ஆர்.,-மு.க.முத்து என்று பார்க்காமல், எம்.ஜி.ஆர்-கருணாநிதி என்று பார்த்தார்கள். பூக்காரியில் தொடங்கி பிள்ளையோ பிள்ளை, சமையல்காரன், அணையா விளக்கு என பல படங்களில் நடித்திருந்தாலும், எந்த நோக்கத்திற்காக அவர் நடிக்க வந்தாரோ , அது கடைசி வரை நிறைவேறவில்லை. எம்.ஜி.ஆர்., எனும் மக்கள் சக்தியை அவரால் நெருங்கவே முடியவில்லை.
அதே நேரத்தில் மு.க.முத்து நடிகராக மட்டுமல்லாமல், நல்ல பாடகராகவும் தனது திரைப்பயணத்தில் பயணித்தார். அவரது பாடல்கள் பலராலும் விரும்பி கேட்கப்பட்டன. ஒரு கட்டத்தில் நினைத்தது நிறைவேறாமல் சினிமாவில் இருந்து ஒதுங்கிக் கொண்டார் மு.க.முத்து. கலைஞரின் ஒரே அரசியல் வாரிசு, சினிமாவில் தன் தடத்தை பதிவு செய்ததே தவிர, காலூன்றி கடக்கவில்லை என்கிற வருத்தம், கருணாநிதிக்கும் இருந்தது என்பார்கள்.
மக்கள் செல்வாக்கு மிக்க நடிகரை எதிர்க்க, நேரடியாக களமிறங்கிய ஒரு கலை வாரிசின் கனவுப்பயணம் தொடங்கிய நாள் இன்று. இதே நாளில், கருணாநிதியின் ஆதரவாளர்கள் கொண்டாடப்பட்ட பூக்காரி திரைப்படம், அப்போது இதே நாளில் பரபரப்பாக பேசப்பட்டது, பார்க்கப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்