தமிழ்நாடு மக்களால் மக்கள் திலகம் என கொண்டாடப்படும் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் 106வது பிறந்தநாள் இன்று. இந்த மாமனிதனின் பிறந்தநாள் அன்று அவர் பற்றின சில ஸ்வாரஸ்யமான நெகிழ்ச்சியான தகவல்கள் குறித்து நினைவுகளால் பயணிக்கலாம் :
திரைவாழ்வில் எம்.ஜி.ஆர் தொடாத உயரமே இல்லை எனும் அளவிற்கு புகழின் உச்சியில் இருந்தாலும் திரை தயாரிப்பாளர்களை முதலாளி என்றே அழைக்க கூடியவர். அவர்கள் நன்றாக இருந்தால் தானே நம்மால் நன்றாக இருக்க முடியும் என பரந்த சிந்தனை கொண்டவர். படத்தின் திரைக்கதையிலும், பாடல்களிலும் அவருக்கு இருந்த ஈடுபாட்டிற்கு இணையாக எந்த நடிகராலும் இதுவரையில் அல்ல இனியும் வர முடியாது. தொழில் பக்தியில் முதன்மையானவர்.
சினிமாவில் ஜொலிக்க முக வசீகரம் மிகவும் முக்கியமான ஒன்று. இயற்கையிலேயே அது எம்.ஜி.ஆருக்கு சற்று தூக்கலாகவே அமைந்து இருந்தது. அவரின் முகத்தை ஒரு முறையேனும் பார்த்துவிட மாட்டோமா என கால்கடுக்க இரண்டு மூன்று நாட்கள் கூட காத்திருந்த ஜனங்களும் உண்டு. இன்றைய தலைமுறையினருக்கு இது புரியுமா என தெரியாது. ஆனால் அது தான் மக்கள் திலகத்தின் முக வசீகரத்தின் சிறப்பு.
மேடை பேச்சாக இருக்கட்டும் அல்லது திரையில் அவர் பேசும் வசனங்களாக இருக்கட்டும் அனைத்துமே அன்றைய மக்களின் மனதிற்கு மிகவும் நெருக்கமானவை. மக்கள் மொழியிலேயே பேசுவது அவரின் தனிச்சிறப்பு.
எம்.ஜி.ஆருக்கு இருந்த பல திறமைகளில் ஒன்று அவர் ஒரு தேர்ந்த புகைப்பட கலைஞர். எந்த நாட்டுக்கு பயணம் மேற்கொண்டாலும் அங்கிருந்து அவர் வாங்கி வரும் பொருட்களில் நிச்சயமாக கேமராவும் இருக்குமாம். பலவகையான கேமராக்களை சேகரித்து அதை தனக்கு விருப்பமானவர்களுக்கு பரிசளிக்கும் வழக்கம் கொண்டவர்.
எம்.ஜி.ஆர் மீன் வகைகளை ருசிப்பதில் தீவிர ரசிகர். ஆனால் காபி, டீ குடிக்கும் பழக்கம் அறவே இல்லையாம். இருப்பினும் படப்பிடிப்பின் இடையிடையே சீரக தண்ணீர் குடிப்பதை வழக்கமாக கொண்டவர்.
எம்.ஜி.ஆர் தங்கபுஷ்பம் சாப்பிடுவதால் தான் அவர் பெரும்பாலும் வெள்ளை நிற ஆடையை அணிகிறார் என்ற வதந்திக்கு ஒரு முறை அவர் பதில் அளிக்கையில் "குண்டு ஊசியின் முனையில் மட்டுமே தங்கபுஷ்பத்தை தொட்டு அதை நெய்யில் அல்லது பாலில் கலந்து சாப்பிட வேண்டும். கொஞ்சம் அதிகமானாலும் மரணம் தான் என நான் கேள்விப்பட்டு இருக்கிறேன். அப்படி இருக்கும் போது அதை யாராவது செய்வார்களா?" என கூறினாராம் எம்.ஜி.ஆர்.
தொடர் உடற்பயிற்சி தான் அவரின் ஆரோக்கியத்திற்கு முக்கியமான காரணம். அதே போல படப்பிடிப்பு காரணமாக இரவு தூங்க எத்தனை மணி நேரமானாலும் அதிகாலை 5 மணிக்கு டான் என எழுந்துவிடுவாராம். உடற்பயிற்சி செய்த பிறகே அடுத்த வேலையில் இறங்கும் எம்.ஜி.ஆர், படப்பிடிப்பிற்காக எந்த ஊருக்கு சென்றாலும் கூடவே உடற்பயிற்சி கருவிகளையும் உடன் எடுத்து செல்லும் பழக்கம் கொண்டவர்.
எம்.ஜி.ஆர் ஒரு அரசியல் தலைவர், நடிகர் என்பது மட்டுமே பலருக்கும் தெரியும். ஆனால் பலரும் அறியாத ஒரு தகவல் அவர் ஒரு பத்திரிகையாளர் என்பது. அவர் நடத்தி வந்த பத்திரிக்கையின் பெயர் 'சமநீதி'. பல ஆண்டுகள் அதன் பொறுப்பாசிரியராக இருந்துள்ளார்.
எம்.ஜி.ஆருக்கு பிடிக்காத ஒன்று விமான பயணம் மற்றும் குதிரையேற்றம். வேறு வழியில்லாமல் மட்டுமே சில படங்களில் அவர் குதிரையேற்றம் மேற்கொள்வது போன்ற காட்சிகளில் நடித்தாராம். எம்.ஜி.ஆர். நடிப்பில் மிகவும் குறைந்த நாட்களில் எடுத்து முடிக்கப்பட்ட திரைப்படம் 'தேர்த்திருவிழா'. எத்தனை நாட்கள் என தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். 16 நாட்களிலேயே படப்பிடிப்பு முடிவடைந்தது.
திரையை தவிர மற்ற இடங்களில் முழங்கையளவு வெள்ளை சட்டை, தொப்பி, கருப்பு கண்ணாடி உள்ளிட்டவையோடு காட்சியளிக்கும் எம்.ஜி.ஆர் வீட்டில் ஹாயாக என்றுமே பணியனுடனும் , கைலியுடனும் தான் காட்சி கொடுப்பாராம்.
எம்.ஜி.ஆர் பற்றி பேச ஒரு நாள் போதாது. இது சொச்சம் மட்டுமே. புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்கு பிடித்த விஷயம் மட்டுமின்றி பல பிடிக்காத விசஷயங்கள் பற்றியும் அவரின் பிறந்தநாளான இன்று இந்த கட்டுரையின் மூலம் பகிர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி.