முதலமைச்சர் ஸ்டாலின் நேர மேலாண்மையில் சர்வதேச ஒழுங்கைக் கடைப்பிடிக்கிறார் என கவிப்பேரரசு வைரமுத்து பாராட்டி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கவிஞர் வைரமுத்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ் ஆக செயல்படுபவர். என்ன விஷயமாக இருந்தாலும் சரி பாராட்ட வேண்டும் என்றால் மனமுவந்து பாராட்டுபவர். இவரது சமூக வலைத்தள பக்கங்களில் இயற்கை, சமூக நிகழ்வுகள், மனிதர்கள், படங்கள் என அனைத்தை பற்றியும் பதிவுகளை வெளியிடுவார். இப்படியான நிலையில் சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் ஸ்டாலினோடு பேசிய நிகழ்வு பற்றி பதிவுகளை வெளியிட்டிருந்தார்.
அதில், “முதலமைச்சரோடு தொலைபேசினேன். பரப்புரைகளில் அவரது குன்றாத குரல் உயரத்தையும் கூடிவரும் கூட்டத்தையும் கொண்டாடிச் சொன்னேன். ஒற்றை நட்சத்திரமாய் உலாவரும் பெருமை சொன்னேன். நாற்பதும் நமதே என்றார் கலைஞர். நூற்றாண்டுக்குப் பெற்ற மகன் வழங்கும் பெரும் பரிசு” என பதிவிட்டிருந்தார். இது மிகப்பெரிய அளவில் வைரலானது.
தொடர்ந்து மற்றொரு பதிவில், “மக்கள் வெள்ளம் மணியான பேச்சு துருப்பிடிக்காத உற்சாகம் தகர்க்க முடியாத தர்க்கம் சொல்லியடித்த புள்ளிவிவரம் சோர்ந்துவிடாத உடல்மொழி தற்புகழ் கழிந்த உரை தமிழர்மீது அக்கறை இந்தத் தேர்தல் களத்தின் ஆட்ட நாயகன் முதலமைச்சர்தான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்தான் ஒரு பூங்கொத்து” என கூறியிருந்தார்.
இப்படியான நிலையில் தற்போது பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “முதலமைச்சரை நேற்று முகாம் அலுவலகத்தில் சந்தித்தேன். குறித்த நேரம் காலை 10.15. நான் அடைந்த நேரம் 10.14. முதலமைச்சர் வந்து வரவேற்ற நேரம் 10.15 நேர மேலாண்மையில் சர்வதேச ஒழுங்கைக் கடைப்பிடிக்கிறார் 40 ஆண்டுகளாய்ப் பார்த்தும் பழகியும் வருகிறேன் பருவம் கூடக் கூடப் பக்குவம் கூடிவருகிறது வயது கூடக் கூட மரம் வைரம் பாய்வது மாதிரி” என தெரிவித்துள்ளார்.
மதுவை பற்றி பாடல் எழுதிய வைரமுத்து
இதனிடையே படிக்காத பக்கங்கள் என்ற படத்தில் வைரமுத்து ம்துவால் நிகழும் மரணம் பற்றி பாடல் எழுதியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “மரணத்திற்கு முன்பே மனிதனைப் புதைத்துவிடுகிறது மது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 16 மதுச் சாவுகள் நிகழ்கின்றன 44 முதல் 67 விழுக்காடு சாலை விபத்துகள் மதுவால் நேர்கின்றன 20மில்லி ரத்தத்தில் கலந்தாலே பார்வையைப் பாதிக்கிறது மது 30மில்லி கலந்தால் தசை தன் கட்டுப்பாட்டை இழந்துவிடுகிறது ஒருநாட்டின் மனிதவளம் தவணைமுறையில் சாகிறது ஒழுக்கக்கோடுகள் அழிந்து ஒழுக்கக்கேடுகள் நுழைகின்றன வாழ்வியலில் மதுவுக்கு எதிராக நான் ஒருபாடலை எழுதியுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.