Lok Sabha Election 2024: அமேதி தொகுதியில் ராகுல் காந்தியும்,  ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தியும் போட்டியிட வேண்டும் என காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்கள் யார்?


காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில்,, ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி வதேராவை அகியோர் முறையே,  உத்தரபிரதேசத்தில் உள்ள அமேதி மற்றும் ரேபரேலி மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவிடம் ஏராளமான நிர்வாகிகள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. உத்தரப்பிரதேசத்தின் காங்கிரஸ் பொதுச் செயலாளர், பொறுப்பாளர் உள்ளிட்ட தலைவர்கள், ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோரை கட்சியின் வேட்பாளர்களாகக் கடுமையாக முன்னிறுத்தியுள்ளனர். காங்கிரஸின் பாரம்பரிய கோட்டைகளான அமேதி மற்றும் ரேபரேலியில், அக்கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்தியின் பிள்ளைகள் போட்டியிடுவார்கள் என பல நாட்களாக தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், குற்ப்பிட்ட 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை, விரைவில் கட்சி தலைவர் கார்கே இறுதி செய்வார் என கூறப்படுகிறது. 


காங்கிரஸ் தலைவர்கள் சொல்வது என்ன?


அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி போட்டியிடாவிட்டால்,  இந்தி பேசும் மாநிலங்கள் பாஜகவுக்கு என காங்கிரஸ் ஒப்புக்கொண்டது என்ற தவறான செய்தியை அனுப்பும் என்று கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.


அமேதி, ரேபரேலி தொகுதி வரலாறு:


அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகள் பல ஆண்டுகளாக காங்கிரஸின் கோட்டையாக திகழ்வதால், அந்த தொகுதி தேர்தல் முடிவுகள் தீவிரமாகக் கவனிக்கப்படுகிறது. அமேதியில்  2004, 2009 மற்றும் 2014ல் தேர்தலில்,  ராகுல் காந்தி தொடர்ந்து வெற்றி பெற்றார். ஆனால் 2019 மக்களவை தேர்தலில் தற்போதய மத்திய அமைச்சரான பாஜக தலைவர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்தார். அதேநேரம், ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த முறையும் அவர் வயநாடு தொகுதியில் போட்டியிட்டுள்ளார். கூடுதலாக அமேதியிலும் மீண்டும் போட்டியிட நிர்வாகிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.


ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, கடந்த 2004 தொடர்ந்து நான்குமுறை வெற்றி பெற்றுள்ளார்.  ஆனால் இந்த முறை தேர்தலில் போட்டியிடாமல், மாநிலங்களவை உறுப்பினராக முடிவு செய்துள்ளார். இதன் காரணமாக அவருக்கு பதிலாக ரேபரேலியில் பிரியங்கா காந்தி போட்டியிட வேண்டும் என நிர்வாகிகள் வலியுறுத்துகின்ற்றனர்.


முதல் பொதுத் தேர்தலுக்குப் பிறகு ரேபரேலியில் காங்கிரஸ் 17 முறை வெற்றி பெற்றுள்ளது. இந்த தொகுதியை முதலில் பெரோஸ் காந்தியும் பின்னர் மூன்று முறை இந்திரா காந்தியும் பிரதிநிதித்துவப்படுத்தினர். 1977 ஆம் ஆண்டில், ஜனதா கட்சித் தலைவர் ராஜ் நரேன், இந்திரா காந்தியை வீழ்த்தி கவனம் ஈர்த்தார். 1996 மற்றும் 1998 தேர்தல்களில் இங்கு பாஜக வெற்றி பெற்றது. 


அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் ஐந்தாம் கட்டமாக, வரும் மே 20ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.