நடிகராக, இயக்குனராக, தயாரிப்பாளராக, ஏன்... இசையமைப்பாளராக கூட நாம் அனைவரும் அறிந்தவர் பாக்யராஜ். பாக்யராஜ் படத்தில் பாடல்கள் எப்போதும் தனித்துவமாக இருக்கும். அந்த தனித்துவத்திற்கு பெரும்பாலும் பக்க பலமாக இருந்தவர் இளையராஜா. ஒரு கட்டத்தில் இளையராஜா உடன் மோதல் ஏற்பட, தானே இசையமைப்பாளராக மாறி, அதிலும் வெற்றி பெற்றவர் பாக்யராஜ்.
பாக்யராஜ் எப்படி, இயக்குனராக இருந்து பல நடிகர்களுடன், கலைஞர்களுடன் பணியாற்றியிருப்பாரோ, அதே போல் தான், இசையமைப்பாளராக பல பாடகர்கள், பாடலாசிரியர்களிடமும் பணியாற்றி இருப்பார். அந்த வகையில், மறைந்த இளைமை கவிஞர் வாலி உடன், பாக்யராஜ் பணியாற்றிய காலங்கள், மிகவும் சுவாரஸ்யமானது என்கிறார்கள்.
பொதுவாகவே படங்களை எடுப்பதைப் போன்றே, பாடல்களையும் தேர்வு செய்துள்ளார் பாக்யராஜ். இதற்காக, கவிஞர் வாலி போன்ற பெரிய பாடலாசிரியர்கள் எல்லாம், அவரிடம் படாதபாடு பட்டுள்ளனர். ‛இனிமே இவருக்கு பாடலே’ எழுதக்கூடாது என்றெல்லாம் முடிவு செய்து, பலமுறை அதற்கான முயற்சியையும் எடுத்துள்ளார், வாலிப கவிஞர் வாலி.
சில ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், பாக்யராஜ் பற்றி பேசிய கவிஞர் வாலி, பாக்யராஜ் உடன் 6 படங்களில் பணியாற்றியதாகவும், அப்போது தான் மோசமான அனுபவங்களை பெற்றதாக, அவரை வைத்துக் கொண்டே குற்றம்சாட்டினார். இதோ வாலியின் உரை...
’‛நம்ப மாட்டீங்க... ராப்பகலா சோறு தின்னாம, பத்து, பனிரெண்டு நாள், கையில ஆர்மோனியத்தை வெச்சிட்டு, கண்ணெல்லாம் வெளியே வந்திடுச்சு. அந்த அளவுக்கு போட்டு வருத்திகிட்டு, 6 படம், பாக்யராஜ் மியூசிக்ல பாடல் எழுதியிருக்கேன். நல்ல ரசிகர், நல்ல மரியாதை கொடுப்பார். ஆனால், அவரிடம் ஒரே ஒரு கஷ்டம். அந்த சிகரெட்டை எடுத்து புகையை விட்டார்னா... அவர் புகையையெல்லாம் நான் வாங்குவேன்.
என்ன விசயத்தில, அவர் மீது எரிச்சல் வரும்னா... ஒரு பல்லவி எழுதி கொடுத்தா, நான் தூங்கி எழுந்து, விடிஞ்சு பூர்ணிமா டிபன் செய்து கொடுத்தும் அதை படிச்சுட்டு இருப்பாரு. ஒரு முடிவுக்கு வரமாட்டான் அந்த ஆளு. நான் உடனே முடிவு பண்ணிடுவேன்... ‛இனிமே இந்த ஆளுட்ட அடுத்த பாட்டு எழுதவே கூடாது...’ என்று. அப்படி முடிவு பண்ணிட்டு இருக்கும் போது தான், என் மைத்துனன் சாமிநாதனிடம் ஒரு கவர் வந்து சேரும். கவர்ல 5 ஆயிரம் ரூபாய் இருக்கும். அப்புறம் எப்படி எழுத முடியாதுனு சொல்ல முடியும்’’
என்று கவிஞர் வாலி, பேசியிருந்தார். தான் இசையமைப்பாளராக வர வேண்டும் என்று முடிவு செய்ததுமே, பாக்யராஜ் அதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கினார். முறையாக இசையை கற்று, அதற்கான பயிற்சிகளை இரவு, பகலாக மேற்கொண்டு, அதன் பிறகே இசையமைப்பாளர் ஆனார். அவரின் இசையில் பல ஹிட் பாடல்கள் வெளியாகியுள்ளன. இன்னும் பலருக்கு அது பாக்யராஜின் இசை என்பதே தெரியாது. அந்த அளவிற்கு பாக்யராஜ், தனித்துவமான இசையை தந்துள்ளார்.