தமிழ் சினிமாவில் , நிறைய பாடலாசிரியர்கள் உள்ளனர். மற்றவர்கள் எழுதும் காதல் பாடல்களில் இரட்டை அர்த்தங்கள் அவ்வப்போது எட்டிபார்க்கும். ஆனால், துளி விரசம் எட்டிப் பார்க்காமல் மேலோட்டமாகத் தொட்டுச் செல்லும்படியான வரிகளை நெய்பவர் தாமரை. தாமரையின் தனித்துவமான பாடல் வரிகளுக்கு ரசிகர்கள் பட்டாளமே உண்டு.


தமிழ் மீதான பற்றும் ஆர்வமும், கவிஞர் மற்றும் நாடக ஆசிரியரான அவரின் தந்தையிடம் இருந்தே வந்தது. தாமரையின் இலக்கியப் படைப்புகள் பிரபலமாகியது. அதற்காக தமிழ்ச்சங்க விருது மற்றும் சிற்பி ஆகிய விருதுகளை தாமரை பெற்றார். பின்னர் இயக்குநர் சீமான், படத்தில் பாடல் எழுத வாய்ப்பு கொடுத்தார். முதன்முதலாக இனியவளே என்ற திரைப்படத்தில் 
“தென்றல் எந்தன் நடையைக் கேட்டது” என்ற பாடல் வரிகளை எழுதி சினி உலகில் கால்தடம் பதித்தார்.




மேலும், “உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்”, “இஞ்சிரங்கோ இஞ்சிரங்கோ” ஆகிய பாடல்களை எழுதினார். அதன் பின், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜுடன் மின்னலே படத்திற்காக கைக்கோர்தார். இந்த படத்தில் உள்ள வசீகரா பாடல் செம ஹிட்டானது. இந்த படம் ஒன்றே, தாமரையின் வாழ்வை திருப்பி போட்டது.


இயக்குநர் கெளதம் மேனன், ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் தாமரை ஆகிய மூவர் அடங்கிய காம்போ, “காக்க காக்க”, “வேட்டையாடு விளையாடு”,  “பச்சைக்கிளி முத்துச்சரம்”,  “வாரணம் ஆயிரம்” ஆகிய படங்களில் தொடர்ந்து ஹிட் கொடுத்தது. 


கெளதம் மேனன் மற்றும் ஹாரிஸ் காம்போ முடிந்த பின்னர் தாமரை, கெளதம் மேனன் மற்றும் ஏ.ஆர் ரஹ்மான் ஆகியோருடன் இணைந்து பாடல் எழுத துவங்கினார். நீண்ட நாட்களுக்கு பின், அஜித் நடித்த “என்னை அறிந்தால்” படத்தின் மூலம் கோலிவுட்டின் சூப்பர் காம்போ மீண்டும் இணைந்தது. 


தாமரை பெற்ற விருதுகள் : 


வாரணம் ஆயிரம், விண்ணைதாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களுக்கு பாடல் எழுதிய தாமரை சிறந்த பாடலாசிரியருக்கான ஃப்லிம் ஃபேர் விருதினை பெற்றார். தெனாலி படத்திற்காக சிறந்த பாடலாசிரியருக்கான தமிழ் நாட்டின் மாநில விருதினை பெற்றார். அத்துடன் தமிழக அரசு, பாவேந்தர் பாரதிதாசன் விருதையும் கொடுத்து கெளவரப்படுத்தியது. 






சமீபத்தில், “வெந்து தணிந்தது காடு” படத்தில் இடம் பெற்ற மல்லிப்பூ பாடல் பலரது மனதை கவர்ந்து, காலர் ட்யூனாக பட்டி தொட்டியெங்கும் பரவியது. தமிழ் சினிமாவின் முதல் பெண் பாடலாசிரியர் என்ற பெருமையை கொண்ட தாமரைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !