நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் வெற்றி விழாவில் பாடலாசிரியர் சுப்பர் சுப்பு, இயக்குநர் நெல்சன் காலில் விழுந்து நன்றி தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 


கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி  தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்தின் 169வது படமாக ‘ஜெயிலர்’ வெளியானது. இப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் ,யோகிபாபு, விநாயகம், வசந்த் ரவி, மோகன்லால், ரித்விக், மிர்னா மேனன், சரவணன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள்  நடித்துள்ள இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். திரையிட்ட இடமெல்லாம் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக  ஜெயிலர் படம் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் வசூலிலும் நல்ல சாதனைப் படைத்து வருகிறது.


ஜெயிலர் படம் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூ.375 கோடி வசூல் செய்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஜெயிலர் படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான நிலையில், ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக தியேட்டர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இப்படியான நிலையில் ஜெயிலர் படத்தில் வெற்றி கொண்டாட்டம் சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. 


இதில் நடிகர்கள் வசந்த் ரவி, சுனில் வர்மா, ஜாஃபர், ரெட்டின் கிங்ஸ்லி, நடிகை மிர்னா மேனன், இயக்குனர் நெல்சன், பாடலாசிரியர் சூப்பர் சுப்பு உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் பேசிய சுப்பர் சுப்பு, ‘ நான் என்ன பேசப்போகிறேன் என்கிற ஐடியாவே இல்லை. முதலில் நான் இயக்குநர் நெல்சனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். காரணம் இந்த பாடல் எழுதும் வரை நான் யாரென்று கூட உங்களுக்கு தெரியாது. இந்த வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி.


ஹூக்கும் பாடலை ஒரு ரசிகனாகவே நான் எழுதினேன். இந்த பாடலை திரையில் மிரட்டலாக காட்டிய அத்தனை துறையினருக்கும் நன்றி, அதேசமயம் தனிப்பட்ட முறையில் நான் அனிருத்திற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். அவர் இல்லையென்றால் நெல்சனுக்கு நான் யாரென தெரிய வாய்ப்பில்லை. அனிருத் எப்பவுமே ஒரு படத்தை ஜெயிக்க வைக்க வெறித்தனமாக வேலை பார்க்கும் மனிதர்.


அவர் என்னை அடையாளம் கண்டு இந்த படத்திற்காக பணியாற்ற வைத்ததற்கு மிகவும் நன்றி. எல்லாத்துக்கும் மேல ரஜினி ரஜினியாக இருந்ததற்கு நன்றி.  இதையெல்லாம் உருவாக்கி கொடுத்த நெல்சனுக்கு நன்றி என சொல்லிவிட்டு அவர் காலில் விழுந்து கும்பிட்டார் சூப்பர் சுப்பு. இந்த சம்பவம் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது. 


மேலும் படிக்க: ‘ரஜினி எதிர்பார்த்த மாதிரி படம் இல்ல'.. ஜெயிலர் வெற்றி விழாவில் இயக்குநர் நெல்சன் தகவல்..!