நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆக்ஸ்ட் 10 ஆம் தேதி வெளியானது . பீஸ்ட் படத்தின் தோல்வியைத் தொடர்ந்து இயக்குநர் நெல்சன் திலீப்குமார் மீது கடுமையான விமர்சங்னகள் இருந்த நிலையில் ஜெயிலர் படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தந்திருக்கிறது.


வெளியான ஒரு வாரத்தில் உலகம் முழுவதும் 375 கோடிக்கும் மேலாக வசூல் செய்திருக்கிறது. இந்த வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று சென்னையை பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் நெல்சன்,  நடிகர் வசந்த், ரெடின் கிங்ஸ்லி, ஜாஃபர், நடிகை மிர்னா மேனன், ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன் , ஹூகும் பாடலாசிரியர் சூப்பர் சுப்பு உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டார்கள்.


நிகழ்ச்சியில் இருதியாக பேசிய இயக்குநர் நெல்சன் ஜெயிலர் படத்தின் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் தனித்தனியாக நன்றி தெரிவித்தார். தயாரிப்பாளர் கலாநிதி மாறனுக்கு  நன்றி தெரிவித்த நெல்சன் அடுத்ததாக சூப்பஸ்டார் ரஜினிகாந்த் பற்றி பேசினார்.


ரஜினி சார் கொடுத்த நம்பிக்கை


ஜெயிலர் படத்திற்கு இத்தனை பேர் சேர்ந்து உழைத்தாலும் இந்தப் படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். என்னைப் பற்றி எத்தனை விமர்சனங்கள் வெளியே பேசப்பட்டாலும் அதை எதுவும் அவர் கண்டுகொள்ளவில்லை. தனது ஸ்டார் இமேஜ் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு இந்தப் படத்திற்காக தனது முழு உழைப்பையும் கொடுத்தார் ரஜினிகாந்த்.


பட வேலைகள் முழுவதும் முடிந்து முதல் ப்ரிவியூ பார்த்தபோது நான் ரஜினியிடம் அவர் எதிர்பார்த்தது போல் படம் வந்திருக்கிறதா என்று கேட்டேன் . தான் எதிர்பார்த்ததை விட பத்து மடங்கு அதிகமாகவே படம் வந்திருப்பதாக ரஜினி என்னிடம் கூறினார். அவர் அப்போது சொன்ன வார்த்தை ஒன்றே எனக்கு இந்தப் படத்தின் மீது இருந்த நம்பிக்கையை அதிகரித்தது.” என்று நெல்சன் கூறினார்.


கண்களால் நடிப்பவர் ரஜினி


ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினியின் கண்களுக்கு அதிகம் க்ளோஸ் அப் ஷாட்கள் வைக்கப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டி  நெல்சனிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு காரணமாக நெல்சன் தெரிவித்ததாவது “ கோபம், சோகம் என எந்த ஒரு  உணர்வு என்றாலும் அதை முதலில் வெளிப்படுத்துவது அவரது கண்கள்தான். ரஜினி சாரிடம் நான் சாதாரணமாக பேசும்போதே அவரது கண்களை அதிகம் கவனித்திருக்கிறேன்.


அவரது கண்களை இன்னும் நெருக்கமாக காட்டலாம் என்று ஒளிப்பதிவாளரும் நானும் பேசி முடிவு செய்தோம். வழக்கத்தைவிட கொஞ்சம் அதிகமாகவே அவரது கண்களுக்கு ஷாட் வைத்திருந்தோம்”. என்று நெல்சன் தெரிவித்தார்.