1428 நியாயவிலைக் கடைகளிலும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் சிறப்பு முகாம்கள் ஆகஸ்ட் 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெறும். முதல் இரண்டு கட்ட முகாம்களில் பங்கேற்க தவறியவர்கள் சிறப்பு முகாம்களில் பங்கேற்று விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு.


தமிழ்நாடு முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி நடைமுறைக்கு வரவுள்ளது. இத்திட்டத்தின் படி, குடும்ப பெண்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளது. குறிப்பாக சென்னையில் உள்ள 1428 நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு இரண்டு கட்டமாக முகாம்கள் நடைபெற்றது. இதில் வழிகாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு பெண்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.


மொத்தமாக, 12,50,682  விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டதில், 9,08,380 விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற முகாம்களில் சூழ்நிலை காரணமாக பங்கேற்க இயலாத பெண்களுக்காக, வருகின்ற ஆகஸ்ட் 18-ஆம் தேதி முதல் 20ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு சிறப்பு முகாம்கள் நடைபெறும் எனவும், இதில் முதல் இரண்டு கட்ட முகாம்களில் பங்கேற்க இயலாத பெண்கள் மட்டும் பங்கேற்று விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் உள்ள 1428 நியாயவிலைக் கடைகளிலும் முகாம்கள் நடைபெறும் எனவும் சந்தேகங்கள் ஏதும் இருந்தால் 044-25619208 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளலாம் எனவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.


கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தலைமைச் செயலகத்தில் 13 ஆம் தேதி  நடத்தினார். அதன் முடிவில், விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளின் குடும்பத் தலைவிகள், முதியோர் ஓய்வூதியத் திட்டங்களில் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள தகுதிவாய்ந்த மகளிர் மற்றும் ஏற்கெனவே முகாம்களில் பதிவு செய்ய நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் வருகை புரிய இயலாத குடும்பத் தலைவிகள் விண்ணப்பங்கள் பதிவு செய்ய, ஆகஸ்ட் 18,19,20 ஆகிய மூன்று நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.


மேற்கண்ட வகை குடும்பங்களில் உள்ள‌ பெண்கள் ஏற்கனவே விண்ணப்பித்திருந்தால், மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை. இதுவரை விண்ணப்பிக்காத தகுதியான பயனாளிகள் அனைவரும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற, இதுவரை ஒரு கோடியே 54 இலட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசிச் செயலி வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


TN Weather Update: சுட்டெரிக்கும் சூரியன்.. வெப்பநிலை அதிகரிக்கும்.. ஆனால் ஒரு ட்விட்ஸ்ட்! - வானிலை சொல்வது என்ன?


Luna 25 Vs Chandrayaan 3: சந்திரயான் 3-க்கு டஃப் கொடுக்கும் லூனா 25.. நிலவின் நீள்வட்டப்பாதையில் பயணிக்கும் இருநாட்டு விண்கலம்..