பருத்திவீரன் படம் தொடர்பான பிரச்சினையில் இயக்குநர் அமீருக்கு பாடலாசிரியர் சினேகன் ஆதரவு தெரிவிக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 


கடந்த 2007 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி நடிகராக அறிமுகமான பருத்தி வீரன் படம் வெளியானது. அமீர் இயக்கிய இந்த படத்தில் ப்ரியாமணி, பொன்வண்ணன், சுஜாதா விஜயகுமார், கஞ்சா கருப்பு, சரவணன் என பலரும் நடித்திருந்தனர். ஞானவேல் ராஜா தயாரித்த இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற அப்படம் பலருக்கும் திருப்புமுனையாக அமைந்தது. குறிப்பாக நடிகை ப்ரியாமணிக்கு  சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. 


இதனிடையே சில வாரங்களுக்கு முன்பு கார்த்தி நடித்த 25வது படமான ஜப்பான் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது. இதில் அவரின் அனைத்து பட இயக்குநர்களும் அழைக்கப்பட்ட நிலையில், பருத்தி வீரன் கொடுத்து கார்த்தியை அறிமுகம் செய்த அமீர் கலந்து கொள்ளாதது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து நேர்காணல் ஒன்றில் அமீர் பருத்தி வீரன் பட சமயத்தில் நடந்த பிரச்சினைகள் பற்றி பேசினார். 






இதற்கு பதிலளித்த ஞானவேல்ராஜா, ‘அமீரால் தனக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும், அவர் ஒரு திருடன்’ என்றும் சரமாரியாக விமர்சித்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட, இந்த விவகாரம் 18 ஆண்டுகள் கழித்து மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியது. அமீருக்கு ஆதரவாக சமுத்திரகனி, சசிகுமார், சுதா கொங்காரா, நடிகர் பொன்வண்ணன் ஆகியோர் அறிக்கை வெளியிட்டனர். மேலும் ஞானவேல்ராஜா செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 


இப்படியான நிலையில் பாடலாசிரியர் சினேகன் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், “நான் இயக்குனர் அமீரோடு அவரின் முதல் படத்தில் இருந்து இன்று வரை தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். அவரின் நேர்மையை எடைப்போட்டு பார்க்கும் தகுதி எவருக்கும் இல்லை. பருத்தி வீரன் படத்தை முடிப்பதற்கு அவர் எவ்வளவு சிரமத்திற்கு உள்ளானார் என்பது அவரோடு கூட பயணித்த என்னைப் போன்றவர்களுக்கு தான் தெரியும். ஒருவரை விமர்சிப்பதற்கும் அறம் தெரிந்திருக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார். 


சினேகன் அமீர் இயக்கிய மௌனம் பேசியதே, ராம், பருத்தி வீரன் உள்ளிட்ட படங்களில் பாடல்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.