ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்


கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடந்த நவம்பர் 10 ஆம் தேதி வெளியானத் திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். ராகவா லாரன்ஸ் , எஸ்.ஜே.சூரியா , நிமிஷா சஜயன், சஞ்சனா நடராஜன், சத்யன், இளவரசு, சஞ்சனா நடராஜன், நவீன் சந்திரா உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். சந்தோஷ்  நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்து திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்திருந்தார். ஸ்ச்டோன் பெஞ்சு புரொடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. 


மாபெரும் வெற்றி


கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில்  சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு திரையரங்கில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். காத்திருப்பிற்கு ஏற்ற வகையில் ஜிகர்தண்டா திரைப்படம் அனைத்து விதங்களிலும் ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.  சமூக பிரச்சனை ஒன்றை கமர்ஷியல் வடிவத்திற்குள் மிக நேர்த்தியாக சொல்லப்பட்டிருக்கும் ஜிகர்தண்டா திரைப்படம் இந்த ஆண்டு வெளியான சிறந்த படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.


மேலும் இப்படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களும் தங்களது  நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ளார்கள். மேலும் நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தப் படத்தில் சந்தோஷ் நாராயணனின் இசை அனைவராலும் கொண்டாடப் பட்டு வருகிறது.  விமர்சன ரீதியாக மட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் ஜிகர்தண்டா திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.


மக்களுக்கு நன்றி தெரிவித்த படக்குழு


ஜிகர்தண்டா திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைப் தொடர்ந்து இந்த படத்தின் படக்குழு தமிழ்நாட்டில் உள்ள பிற மாவட்டங்களுக்கு சென்று ரசிகர்களுடம் படத்தை பார்த்து மகிழ்ந்தனர். மேலும் பத்திரிகையாளர்களையும் சந்தித்தனர். இதனைத் தொடர்ந்து ஜிகர்தண்டா படம் எடுக்கப்பட்ட மற்றும் இந்தப் படத்தில் நடித்த கிராம மக்களுடன் சேர்ந்து இந்தப் படத்தைப் பார்வையிட்டனர்.


நடிகர்கள் மட்டுமில்லாமல் இப்படத்தில் நடித்த யானைகள் ரசிகர்களின் மனதை நெகிழ வைத்துள்ளன. யானைகளின் வாழ்க்கை அவற்றின் குணத்தின் வழியாக கதாபாத்திரங்களின் வாழ்க்கையை மிக நுட்பமாக படத்தில் இணைந்துள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். சமீபத்தில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் வெற்றிவிழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படக்குழு தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார்கள். 






தற்போது ஜிகர்தண்டா படம் ப்ளாக்பஸ்டர் ஹிட் ஆக அறிவிக்கப்பட்டு, இதற்காக சிறப்பு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது படக்குழு.  சினிமாவையும் யானைகளையும் ஒப்பிட்டு இந்த வீடியோ அமைந்துள்ளது . இறுதியில்  “ எங்கள் சினிமாவையும் யானைகளையும் கொண்டாடியதற்கு நன்றி” என்று படக்குழு சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.