நடிகர் தனுஷ் நடித்து ரீ-ரிலீஸ் ஆகியுள்ள ‘3’ படம் டிக்கெட் விற்பனையில் புதிய சாதனைப் படைத்துள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மனிதனின் மனதை மகிழ செய்யும் காரணிகளில் ஒன்று தியேட்டர்கள். அதனால் தான் எந்த படமாக இருந்தாலும் சரி மனதுக்கு சிறிது ஓய்வு தேவை என்னும் போது அதனை சரியாக நாடுகிறான். அப்படியான தியேட்டர்களில் புதிய படங்கள் மட்டுமல்லாது பழைய படங்களும் அவ்வப்போது திரையிடப்படும். அதுவும் புதிதாக வெளியான படங்கள் எதுவும் சரியாக போகாவிட்டால், அடுத்தப்படம் வெளிவரும் வரை காத்திருக்காமல் எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் நடித்த படங்களை ஓட்டியிருப்பதை காணலாம்.
ஆனால் காலப்போக்கில் இந்த மாற்றம் வேறு மாதிரியாக செல்ல தொடங்கியுள்ளது. பிரபலங்களின் பிறந்தநாள் வந்தால் அவர்கள் நடித்த பழைய படங்களை மீண்டும் திரையிடப்படுவது கடந்த சில ஆண்டுகளாகவே நடிந்து வருகிறது. அந்த படங்கள் எல்லாம் ஒரு சில நாட்களில் நாள் ஒன்றுக்கு 2 அல்லது 3 காட்சிகள் மட்டுமே திரையிடப்பட்டிருக்கும். மேலும் அன்றைய காலக்கட்டத்தில் கொண்டாடத் தவறிய புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களின் விருப்பத்துக்கிணங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
ரீ-ரிலீஸ் ஆன ‘3’
இப்படியான நிலையில் நடிகர் தனுஷ் நடித்து 2012 ஆம் ஆண்டு வெளியான படம் ‘3’. இந்த படத்தின் மூலம் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளும், நடிகர் தனுஷின் முன்னாள் மனைவியுமான ஐஸ்வர்யா இயக்குநராக அறிமுகமானார். மேலும் இன்றைக்கு இந்திய சினிமாவை தனது இசையால் கலக்கிக் கொண்டிருக்கும் இசையமைப்பாளர் அனிருத்துக்கும் இதுதான் முதல் படமாகும். 3 படத்தில் ஸ்ருதிஹாசன், பிரபு, பானுப்பிரியா, சிவகார்த்திகேயன், ரோகினி, கேபிரியல்லா என பலரும் நடித்திருந்தனர்.
பள்ளி, இளமை, திருமணத்துக்குப் பிறகான வாழ்க்கை ஆகிய 3 பருவங்களின் காதலை அடிப்படியாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் அன்றைய காலக்கட்டத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி கலவையான விமர்சனத்தைப் பெற்றது. காரணம் அப்படத்தின் கிளைமேக்ஸ் தான். அதில் தனுஷ் மனநல பிரச்சினையால் தற்கொலை செய்துக் கொண்டு இறந்து விடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றது பலராலும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
இந்த படம் கடந்த நவம்பர் மாதத்தின் 3வது மாதத்தில் ரி-ரிலீஸ் செய்யப்பட்டது. அதுவும் சென்னையில் முக்கிய தியேட்டர்களில் ஒன்றாக திகழும் வடபழனி கமலா தியேட்டரில் திரையிடப்பட்டது. தீபாவளி படங்கள் சரியாக போகாத காரணத்தால் இப்படம் திரையிடப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தியேட்டர் நிர்வாகம் எதிர்பார்க்காத அளவுக்கு மிகப்பெரிய வரவேற்பு இப்படத்துக்கு மீண்டும் கிடைத்துள்ளது. நாள் ஒன்றுக்கு குறைந்தது 6 காட்சிகள் ‘3’ படம் திரையிடப்படும் நிலையில் கடந்த 2 வாரங்களாக எல்லா காட்சிகளும் ஹவுஸ்ஃபுல் ஆகியுள்ளது. மேலும் இந்த வாரத்துக்கான காட்சிகளின் பெரும்பாலான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டது. இப்படியாக ரிலீஸ் ஆன சமயத்தில் பெறாத வெற்றியை 3 படம் ரீ-ரிலீஸில் பெற்றுள்ளது.
இதுவரை நடந்த காட்சிகள் அடிப்படையில் 3 படம், 33 ஆயிரத்து 333 டிக்கெட்டுகள் விற்று தீர்ந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.