இந்தியன் 2 படத்திற்கு அனிருத் இசையமைக்க என்ன காரணம் என்பதைப் பாடலாசிரியர் பா.விஜய் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


கடந்த 1996ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சுகன்யா, மனிஷா கொய்ராலா, ஊர்மிளா, கவுண்டமணி, செந்தில் எனப் பலரும் நடித்து வெளியான படம் “இந்தியன்”. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ஊழலுக்கு எதிராக பேசிய இந்தியன் படத்தில் இந்தியன் தாத்தாவாக கமல் மிரட்டியிருப்பார். இன்றளவும் அந்த கேரக்டருக்கு என தனி ரசிகர்கள் உள்ளனர். 


இப்படியான நிலையில் கிட்டதட்ட 30 ஆண்டுகள் கழித்து இந்தியன் படத்தின் 2ஆம் பாகம் உருவாகியுள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு பல பிரச்சினைகளுக்குப் பின் ஒரு வழியாக ஷூட்டிங் நிறைவடைந்து ரிலீஸூக்கு தயாராகி உள்ளது. ஜூலை 12ஆம் தேதி இந்தியன் 2 படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர், சித்தார்த், பாபி சிம்ஹா, மாரிமுத்து, மனோபாலா, நெடுமுடி வேணு, ஜெகன், காளிதாஸ் ஜெயராம் என பலரும் நடித்துள்ளனர். அனிருத் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். 






இதனிடையே நேற்று முன்தினம் இந்தியன் 2 படத்தின் முதல் பாடல் “பாரா” வெளியானது. பா.விஜய் எழுதியுள்ள இந்தப் பாடலை அனிருத் மற்றும் ஸ்ருதிகா சாமுத்ரலா இணைந்து பாடியுள்ளனர். இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இசை வெளியீட்டு விழா ஜூன் 1 ஆம் தேதி சென்னையில் மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது. 


இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய பாடலாசிரியர் பா.விஜய், “இந்தியன் 2 படத்திற்கு அனிருத் இசையமைக்க காரணம் சினிமாவில் அவர் அடைந்த வளர்ச்சி தான். ஹாரிஸ் ஜெயராஜ், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களை தன் படங்களில் ஒப்பந்தம் செய்த ஷங்கர் இளம் ரசிகர்களை கவர அனிருத்தை பயன்படுத்த நினைத்திருக்கிறார். சமீபத்திய பல பெரிய படங்களுக்கு அனிருத் அமைத்த இசை எந்தளவுக்கு பெரிய பலமாக இருந்தது நம் அனைவரும் அறிந்தது தான். அதனை தன் படத்தில் பயன்படுத்த வேண்டும் என ஷங்கருக்கு தோன்றியிருக்கலாம். அதனால் அனிருத்துக்கு வாய்ப்பு வழங்கியிருக்கிறார்” என நினைப்பதாக கூறியுள்ளார்.